இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro) ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ஆண்டு அடிப்படையில் 15.2 விழுக்காடு அதிகரித்தது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 49.9 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியது. அத்தொகை இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 57.5 மில்லியன் வெள்ளியாக அதிகரித்தது.
கம்ஃபர்ட்டெல்குரோவின் மொத்த வருவாய் 18.4 விழுக்காடு கூடியது. அதன் வருவாய் சென்ற ஆண்டு பதிவான 996.6 மில்லியன் வெள்ளியிலிருந்து 1.2 பில்லியன் வெள்ளிக்கு அதிகரித்தது.
கம்ஃபர்ட்டெல்குரோ புதன்கிழமையன்று (நவம்பர் 14) இத்தகவல்களை வெளியிட்டது.
அந்நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு வெளிநாட்டுச் சந்தைகள் ஒரு காரணமாகும். வெளிநாடுகளில் உள்ள தனது வர்த்தகங்களின் மூலம் கம்ஃபர்ட்டெல்குரோ ஈட்டிய லாபம் 51.1 விழுக்காடு அதிகரித்தது. பிரிட்டனின் நிலப் போக்குவரத்து நிர்வாக, தங்கும் வசதி நிறுவனமான சிஎம்ஏசி குழுமம் (CMAC Group), ஆஸ்திரேலியாவின் டாக்சி சேவை நிறுவனமான ஏ2பி ஆஸ்திரேலியா ஆகியவைற்றை வாங்கியது அதற்கு முக்கியக் காரணங்களாகும்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் பொதுப் போக்குவரத்துப் பிரிவிலும் வருவாய் அதிகரித்தது. அப்பிரிவில் ஈட்டப்பட்ட லாபம் 758.5 மில்லியன் வெள்ளியிலிருந்து 815 மில்லியன் வெள்ளிக்குக் கூடியது.

