தற்சார்புநிலையை நோக்கி முன்னேறும் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் ‘காம்லிங்க்+’

தற்சார்புநிலையை நோக்கி முன்னேறும் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் ‘காம்லிங்க்+’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Nov 2026 - 6:19 pm

3 mins read

ஒரு வயதுக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி 2012ஆம் ஆண்டு தமது கணவருக்காக காத்திருந்த திருவாட்டி மகேஸ்வரி சுப்பையாவிற்கு வந்துசேர்ந்தது, கணவரின் இறப்புச் செய்தியே.

உடல்நல, கடன் பிரச்சினைகள், மகளின் கல்வி என பல்வேறு சவால்களை அவர் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், அனைத்துச் சவால்களையும் தைரியமாக சமாளித்து தம் மகள் தர்ஷிதா கனகசுந்தரத்திற்காக அயராது உழைத்தார் திருவாட்டி மகேஸ்வரி.

திருவாட்டி மகேஸ்வரி சுப்பையாவும் (இடது) அவரது மகள் தர்ஷிதா கனகசுந்தரமும் விரைவில் தங்கள் சொந்த வீட்டிற்கு மாறவுள்ளனர்.
திருவாட்டி மகேஸ்வரி சுப்பையாவும் (இடது) அவரது மகள் தர்ஷிதா கனகசுந்தரமும் விரைவில் தங்கள் சொந்த வீட்டிற்கு மாறவுள்ளனர். - படம்: மகேஸ்வரி சுப்பையா

2015ஆம் ஆண்டு ‘7-11’ கடையில் வேலைக்குச் சேர்ந்து தற்போது மேலாளர் பணிக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவ்வாண்டு ஜூன் மாதம் தமது அனைத்துக் கடன்களையும் அவர் அடைத்துவிட்டார்.

2015ஆம் ஆண்டு ‘7-11’ கடையில் சேர்ந்த திருவாட்டி மகேஸ்வரி சுப்பையா தற்போது மேலாளராகப் பணிபுரிகிறார்.
2015ஆம் ஆண்டு ‘7-11’ கடையில் சேர்ந்த திருவாட்டி மகேஸ்வரி சுப்பையா தற்போது மேலாளராகப் பணிபுரிகிறார்.

ஈரறை வாடகை வீட்டில் வசிக்கும் தாயும் மகளும் விரைவில் சொந்த வீட்டிற்கு மாறவுள்ளனர்.

இவ்வனைத்திற்கும் பக்கபலமாக விளங்கியது ‘காம்லிங்க்+’ திட்டமென திருவாட்டி மகேஸ்வரி கூறினார்.

திட்டத்தின் நிதியுதவி பயனுள்ளதாக இருந்தாலும் தமக்கு அதிகம் உதவியது தம் வாழ்வியல் பயிற்சியாளர் கிளேரிஸ் என்று அவர் குறிப்பிட்டார்.

“கிளேரிஸ் எனக்கு ஒரு சகோதரி போன்றவர். எனக்கு வீடு வாங்க தேவையான அனைத்து விண்ணப்ப வேலைகளிலும் அவர் உதவினார். என் மகளின் கல்விப் பயணத்திலும் அவர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளார்.

“அவர் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து என் பயணத்தைச் சீர்படுத்தியுள்ளார்,” என்று திருவாட்டி மகேஸ்வரி நெகிழ்ந்தார்.

அவரைப் போலவே பல குடும்பங்களுக்கு காம்லிங்க்+ திட்டம் உதவி வருகிறது.

நீண்டகாலத்துக்குச் சமூக உதவி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாக விளங்குகிறது. அவர்களுக்கு உதவும் வண்ணம் இவ்வாண்டு ஜூலையில் பல்வேறு புதிய முயற்சிகள் அறிமுகம் கண்டன.

இரண்டு பாலர் பள்ளி மாணவர்களைக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு $10,200 வரை நிதியுதவி வழங்குகிறது.

குடும்பங்கள் தொடர்ந்து ஒரு குடும்ப பயிற்றுவிப்பாளரிடம் பயிற்சி பெற்றுவந்தால் அவர்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை $500 வழங்கப்படுகிறது ($200 ரொக்கம் + $300 மத்திய சேம நிதி).

தொடர்ந்து மாதத்திற்கு $2,000 அல்லது அதற்கும் அதிகமான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு காலாண்டும் $1,250 வழங்கப்படுகிறது ($500 ரொக்கம் + $750 மத்திய சேம நிதி).

பாலர் பள்ளி செல்லும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களில் ஒவ்வொரு பிள்ளையும் பள்ளியில் 75 விழுக்காட்டு வருகையைப் பதிவு செய்தால் ஒவ்வொரு காலாண்டும் $250 வழங்கப்படுகிறது ($100 ரொக்கம் + $150 பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு).

கடன் அடைப்பு திட்டத்தின்கீழ் குடும்பங்கள் செலுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கம் ஒரு வெள்ளி செலுத்தும். $5,000 வரையிலான கடன்களை அடைக்க இத்திட்டம் உதவுகிறது.

வீடு வாங்க முனையும் குடும்பங்கள் அவற்றின் மத்திய சேம நிதியில் தாங்களாக செலுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கம் இரண்டு வெள்ளியை வழங்கும்.

இத்தகைய முயற்சிகள் திங்கட்கிழமை (நவம்பர் 16) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட ‘குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் போக்குகள்’ அறிக்கையில் நிலைத்தன்மையை அடையாததாகக் கருதப்படும் 5,496 குடும்பங்களுக்கு கூடுதல் உதவி வழங்க முற்படுகின்றன.

அக்குடும்பங்களில் 54 விழுக்காட்டுக் குடும்பங்களில் ஆறு வயதுக்கும் குறைந்த குழந்தைகள் உள்ளன. 40 விழுக்காட்டு வீடுகள் ஒற்றைப் பெற்றோரால் வழிநடத்தப்படுகின்றன.

அண்மையில் சிறைக்குச் சென்று திரும்பிய உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் 18 விழுக்காடாகவும், இத்தகைய சவால்களில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் குடும்பங்கள் 27 விழுக்காடாகவும் உள்ளன.

ஆறில் ஒரு ‘காம்லிங்க்+’ குடும்பத்திடம் மட்டுமே குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கான அவசரகால சேமிப்புகள் உள்ளன. வாடகை வீடுகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கான சொந்த வீடுகளுக்குப் பதியவில்லை.

அத்தகைய குடும்பங்களுக்கு உதவ திட்டத்தின் முயற்சிகள் முனைகின்றன.

குறிப்புச் சொற்கள்