தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்வலர்கள் பற்றிய கருத்து: ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார் கெல்வின் செங்

2 mins read
655e1cba-68ee-49b5-869f-598d09e9ebab
மூத்த சமய போதகர்கள் உஸ்தாஸ் பசுனி மௌலான், உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசான் இருவரையும் உட்லண்ட்சில் உள்ள யூசூஃப் இஷாக் பள்ளிவாசலில் புதன்கிழமை (ஏப்ரல் 9) சந்தித்ததாகத் திரு கெல்வின் செங் கூறினார். - படம்: கெல்வின் செங்/ஃபேஸ்புக்

சிங்கப்பூரிலுள்ள ஆர்வலர்கள் சிலரை காஸாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் தாம் தெரிவித்த கருத்து குறித்து ஆழ்ந்த வருத்தமடைவதாக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கெல்வின் செங் கூறியுள்ளார்.

தமது கருத்துகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்திச் சினத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஃபேஸ்புக்கில் அவர் அவ்வாறு பதிவிட்டார்.

புதன்கிழமை உட்லண்ட்சில் உள்ள யூசுஃப் இஷாக் பள்ளிவாசலில் மூத்த சமய போதகர்கள் உஸ்தாஸ் பசுனி மௌலான், உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசான் இருவரையும் தாம் சந்தித்ததாகத் திரு செங் கூறினார்.

மூத்த போதகர்கள் இருவரும் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் உறுப்பினர்கள்.

தமது கருத்துகள் குறித்து அவர்களிடம் கலந்துரையாடியதாகவும் எந்தவொரு சமூகத்தையோ சமய நம்பிக்கையையோ தாக்கிப் பேசுவது தமது நோக்கமன்று என்று அவர்களிடம் கூறியதாகவும் திரு செங் கூறினார்.

“வேடிக்கைக்காகக் கூடச் சிலரைப் போர் நடக்கும் இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நான் கூறியிருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்,” என்று அவர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நம் மக்கள் போர் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டும் என்று பரிந்துரைத்த எனது கருத்துகள் குறித்து உஸ்தாஸ் இருவரிடமும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். வருங்காலத்தில் கருத்துரைக்கும்போது கவனமாக நடந்துகொள்ளும்படி அவர்கள் எனக்கு அறிவுரை கூறினர்,” என்றார் திரு செங்.

‘மண்டே ஆஃப் பாலஸ்டைன் சாலிடாரிட்டி’ குழுவைச் சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் சொங் பாங்கில் மார்ச் 12ஆம் தேதி உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பிரச்சினை ஏற்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து திரு செங், அந்த ஆர்வலர்கள் குழுவை காஸாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரத் தேவையில்லை என்றும் மார்ச் 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்