சிங்கப்பூரின் பலம், இந்நாட்டின் மக்கள்.
அந்த மக்கள்தொகையை வளர்த்தெடுப்பதில் அரசாங்கம் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
பிள்ளைகள் பிறந்தது முதல் உயர்கல்வியை முடிக்கும்வரையில் அரசாங்கம் உடன் நின்று கைகொடுக்க உள்ளது.
ஒரு குழந்தை வளர்ந்து 17 வயதை அடையும்வரை ஏறத்தாழ $70,000 மதிப்பிலான நேரடி நிதி ஆதரவு என்பது வருமான அடிப்படையிலின்றி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் என்பது இளம் பெற்றோருக்கு மிகப்பெரிய நிம்மதியையும் நம்பிக்கையையும் தரும் சிறந்த முன்னெடுப்பாகும்.
பாலர் பராமரிப்பு சார்ந்த கொள்கைகளில் அரசாங்கம் தொடர்ந்து பேரளவிலான முதலீடுகளைச் செய்துவருகிறது. குழந்தை, பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகளைக் கட்டி வருவதுடன் துறை சார்ந்த ஊழியர்கள், வல்லுநர்களை உருவாக்குவதிலும் அது அக்கறை செலுத்துகிறது. அரசாங்கம், பள்ளிக் கட்டணங்களையும் வெகுவாகக் குறைத்துள்ளது.
பிள்ளைகளை உடனிருந்து வளர்க்க ஏற்கெனவே 16 வாரம் வரை பிள்ளைப்பேற்று விடுப்புக் கொடுக்கப்படுகிறது. அத்துடன், குழந்தைப் பராமரிப்பு விடுப்பும் தற்போது கூட்டப்பட்டுள்ளது.
வீட்டுரிமைக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிடிஓ வீடுகளை வாங்குவதற்கான வருமான வரம்பு $16,000ஆகவும், எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கு $18,000 ஆகவும் உயர்கிறது. முதல்முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும்.
குடும்பங்கள், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதை அரசாங்கம் பொதுச் சேவையைப் போல் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சிங்கப்பூர்க் குழந்தையும் பெற்றோர் அரவணைப்பு, கல்வி, திறன்கள் என முழுமையான வளர்ச்சியைப் பெற அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
குடும்பம் அமைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்போதவில்லை என்று கூறிவந்தோரின் கருத்துகளுக்குப் பதில் கூறும் வகையில் பிரதமர் வோங்கின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.
தேவைக்கேற்ப, காலத்துக்கு ஏற்ப முழுவதையும் மாற்றியமைக்கும் துணிவுள்ள நாடு சிங்கப்பூர் என்பதையும் இது மெய்ப்பித்துள்ளது.
மக்கள்தொகை சுருங்கிவருவது உலகமெங்கும் காணப்படும் பெரிய பிரச்சினை. வருமுன்னே திட்டமிட்டுச் செயல்படுவது சிங்கப்பூரின் வழி.
அந்த வகையில் மக்கள்தொகைப் பிரச்சினையைக் கையாளச் சிங்கப்பூரர்களைக் குடும்பம் அமைத்துப் பிள்ளைகள் பெற ஊக்குவிப்பதுடன் வெளிநாட்டு குடியேற்றத்தை அரவணைப்பதிலும் அரசாங்கம் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமை பெறுவோர் எண்ணிக்கையைச் சீரான வேகத்தில் வைத்திருக்கும் அதேவேளையில், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சிங்கப்பூரர்களே பெரும்பான்மையினராக இருப்பது உறுதிசெய்யப்படும்.
இனச் சமநிலையைப் பேணுவதுடன் புதியவர்கள் உள்ளூர்ச் சமூகத்தோடு ஒருங்கிணைவதிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றி பெறுவது மக்கள், சமூகத்தின் பொறுப்பு.
பிரதமர் வோங் கூறியதைப் போல, வேலையிடம், சமூகம், மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் விதம் ஆகியவற்றில் குடும்பங்களுக்கு மேலும் உகந்த ஒரு சமூகமாகச் சிங்கப்பூர் உருவெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் ஆதரவு, மானியங்களுக்கு அப்பால் தாத்தா பாட்டி, உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார், முதலாளிகள், பரந்த சமுதாயத்தின் ஆதரவும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியம்.
குடும்ப ஆதரவுத் திட்டங்கள் திறம்படச் செயல்படுவதற்கு நிறுவனங்கள், முதலாளிகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம். சிறு பிள்ளைகள் கொண்ட பெற்றோருக்கு நீக்குப்போக்கான வேலை நேரத்தையும் உரிய விடுப்புகளையும் வழங்குவது, கருவுற்ற பெண்களுக்கும் சிறு பிள்ளைகளின் பெற்றோருக்கும் வேலைவாய்ப்பு, வளர்ச்சியை உறுதி செய்வது முதலியவை வேலையிலும் குடும்பத்திலும் அக்கறை செலுத்த இளம் குடும்பங்களுக்கு உதவும்.
வருமானம், வசதியான வாழ்க்கை, சுற்றுப்பயணங்கள் என்பனவோடு வாழ்வை இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் பிள்ளைச் செல்வம் குறி்த்து இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
எந்த மாற்றத்தையும் தயார்நிலையுடன் ஏற்றுச் செயல்படுபவர்கள் சிங்கப்பூர் மக்கள். அந்த வகையில், குறைந்துவரும் பிறப்புவிகிதம் ஏற்றம் காணும் என நம்பலாம்.
கூடும் மக்கள்தொகைக்குத் தேவையான வளங்களையும் வசதிகளையும் பெருக்குவதிலும் எதிர்கால நோக்கில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கான அதிக நிலப்பரப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்களை இப்போதே திட்டமிடுவது, சிங்கப்பூரை எதிர்காலத் தலைமுறைக்குப் பாதுகாப்பான நாடாகவும் உலக அளவில் போட்டித்தன்மைமிக்க நாடாகவும் தொடர்ந்து வைத்திருக்க உதவும்.
சிங்கப்பூர் மனப்பான்மை என்பது தடைகளைக் கண்டு தளர்ந்துவிடாமல் ஒன்றிணைந்து முன்னேறுவது என்பதைத் திரு வோங் பதிவுசெய்துள்ளார்.
சிங்கப்பூர் மக்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை அமைந்துள்ளது.


