சுல்தான் பிளாசா கடைத்தொகுதியில் உள்ள சீன உணவகம் ஒன்றில் கிருமிநாசினிப் புகையால் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு திடீரெனப் பரபரப்பு ஏற்பட்டது. புகையைக் கண்டு தீ விபத்து என அஞ்சிய 30க்கும் மேற்பட்டோர் கட்டடத்தை விட்டு வெளியேறினர்.
வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு அவசரச் சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் தள உணவகத்திலிருந்து புகை வந்ததை அடுத்துத் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஏஷியாஒன் ஊடகச் செய்தியாளர்கள் இரவு 10.55 மணிக்கு அங்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் லேசான புகை நிலவியதுடன் கடுமையான நெடியும் வீசியது.
கடைத்தொகுதியிலிருந்து சிலர் வெளியேறியதையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டதையும் காண முடிந்ததாக ஏஷியாஒன் குறிப்பிட்டது.
உணவகத்தின் அருகில் உள்ள மதுபானக் கூடத்தில் வேலை செய்யும் 39 வயது சா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த உணவகத்தின் மின் இணைப்பைத் தான் துண்டித்ததாகக் கூறினார். உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினிக் கலன்களே அந்தப் புகையை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கு ஏழு கிருமிநாசினிக் கலன்கள் இருந்ததாகத் தெரிகிறது. அந்தச் சாதனங்களைப் பற்ற வைக்கும்போது அதிகப் புகையும் நெடியும் வரும் என்றும் அப்போது மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இணையத் தகவல்கள் கூறுவதாக ஏஷியாஒன் தெரிவித்தது.
குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ உதவியாளர்கள், சம்பவ இடத்தில் இருவரைப் பரிசோதித்தனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


