ஈசூன் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் காரை மோதிவிட்டு, வீட்டின் உள்ளே பூட்டிக்கொண்டு மிரட்டல் விடுத்த 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மின்னதிர்ச்சி சாதனம் வைத்திருந்ததற்காகவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை (ஜூன் 6) மாலை 6 மணியளவில், ஈசூன் ஸ்திரீட் 11, புளோக் 150ன் தரைத்தளத்தில் கார் ஒன்று மோதியதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த ஆடவர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியதுடன், காவல்துறையினர் வருவதற்குள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். விபத்துக்குள்ளான காரைச் சோதனையிட்டபோது, அதற்குள் ஒரு மின்னதிர்ச்சி சாதனமும் போதைப்பொருள் தொடர்பான பொருள்களும் இருந்தன. இவ்விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், அந்த நபர் அருகில் உள்ள புளோக் 153ல் இருக்கும் வீட்டிற்குள்ளே சென்று தன்னைத்தானே பூட்டிக்கொண்டது தெரியவந்தது.
அவர் தனக்குத்தானே ஆபத்தை விளைவித்துக்கொள்ளக்கூடும் என மதிப்பிடப்பட்டதால், சிறப்பு அதிரடிப்படை, நெருக்கடிநிலை சமரசப் பேச்சுவார்த்தைப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இரவு 11.30 மணியளவில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அதிகாரிகள், அந்த ஆடவரைக் கைது செய்தனர். அந்த வீட்டிற்குள்ளும் போதைப்பொருள் தொடர்பான சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஆடவர் மீது போக்குவரத்து விதிமீறல், மின்னதிர்ச்சி சாதனம் வைத்திருந்தது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரம் குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

