சமூக மருத்துவமனை உதவித்தொகை அக்டோபரில் உயர்த்தப்படும்: அமைச்சர் ஓங்

சமூக மருத்துவமனை உதவித்தொகை அக்டோபரில் உயர்த்தப்படும்: அமைச்சர் ஓங்

2 mins read
482a5585-02a6-40b0-a115-daca5a0d6cd9
சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைக் குழுவின் (இடமிருந்து) திருவாட்டி யூனிஸ் சின், திருவாட்டி கிளாரா போ, திருவாட்டி அடிலின் குவான், இணைப் பேராசிரியர் லீ கெங் ஹொக் ஆகியோர் தேசிய சமூகப் பராமரிப்பு உன்னதக் குழு விருதை வென்றுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்திலிருந்து உதவித்தொகைகள் மேம்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

தீவிர மருத்துவச் சிக்கல்களுக்குக் குறுகியகால சிகிச்சை வழங்கும் பொது மருத்துவமனைகளில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு ஈடாக அது உயர்த்தப்படும்.

சமூக மருத்துவமனைகளில் மேம்பட்ட நோய் கண்டறியும் வழிமுறைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் அமைச்சர்.

பான் பசிஃபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற தேசிய மருத்துவ உன்னத விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

முன்னதாக, மார்ச் மாதம் நடைபெற்ற சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, சமூக மருத்துவமனை உதவித்தொகைக் கட்டமைப்பு, பொது மருத்துவமனை உதவித்தொகைக் கட்டமைப்புக்கு ஈடாக்கப்படும் என்று திரு ஓங் கூறியிருந்தார்.

சமூக மருத்துவமனைகளில் ‘சிடி ஸ்கேன்’, ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ போன்ற நோய் கண்டறியும் வழிமுறைகளுக்கும் தேவையான மருந்துகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

விருது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூப்படையும் மக்கள்தொகையால் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் மாறி வரும் நிலையில் மருத்துவமனைகளுக்கும் சமூகப் பங்காளிகளுக்கும் இடையிலான புதிய பராமரிப்பு முறைகள் உருவாகி வருவதாகக் கூறினார்.

மாற்றங்களை அங்கீகரிக்கும் வகையில், சுகாதார அமைச்சு இந்த ஆண்டு புதிதாக தேசிய சமூகப் பராமரிப்பு உன்னதக் குழு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் அவர்.

சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சமூகப் பராமரிப்பில் நோய்த் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றிய குழுக்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

முதல் விருதை சிங்ஹெல்த் சமூக மருத்துவமனையும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், பல துடிப்புடன் மூப்படைவதற்கான நிலையங்கள் ஆகியவற்றின் பங்காளித்துவத்தில் செயல்படும் குழு பெற்றுக்கொண்டது.

சாங்கி பொது மருத்துவமனையின் தலைமையிலான குழு தேசிய மருத்துவ உன்னதக் குழு விருதைப் பெற்றுக்கொண்டது. மேலும் ஆறு தனிநபர்களும் அமைச்சர் ஓங்கிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்