தொண்டூழியம் செய்தல், குடும்பங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஓராண்டு தொடர்ந்து ஈடுபட்டால், அது தரும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் அளவில்லை என்பது புரியும் என்கிறார் மருத்துவர் ராமசுவாமி அகிலேஸ்வரன்.
நோய்த்தடுப்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நன்கொடை மூலமும் தனது நிபுணத்துவம் மூலமும் வசதிகுறைந்த குடும்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார்.
வடமேற்கு வட்டார சமூக மேம்பாட்டு மன்றத்தின் மாவட்ட மன்ற உறுப்பினரான இவர் இந்த வட்டாரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொண்டூழியராகச் சேவையாற்றி வந்தார். கருத்தொருமித்த பிற தொண்டூழியர்கள் மூலம் ‘கிளப்-100 @ நார்த் வெஸ்ட்’ திட்டம் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவுவதைத் தெரிந்து கொண்டார்.
யாரும் பசியுடன் இருக்கக்கூடாது எனும் குறிக்கோள் கொண்ட இவர், அதனைச் செயல்படுத்த தனது நட்பு வட்டத்தையும் திரட்டி, உரிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
“தன்னார்வத் தொண்டாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன,” என்று கூறும் இவர், ஒவ்வொருவரும் தனது விருப்பத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப, சமூகத்தில் அவ்விதப் பணிகளைச் செய்யும் அமைப்பைத் தேர்ந்தெடுத்து ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நன்கொடை கொடுப்பதோ ஏதோ ஒரு விதத்தில் கல்வி உள்ளிட்ட நிபுணத்துவத்தை வழங்குவதோ தேவையுள்ளோர்க்குப் பேருதவியாக இருக்குமென்று கூறிய மருத்துவர் ராமசாமி, “கிளப்-100 இன்னும் அதிக அளவில் உதவிகள் செய்யவேண்டும் எனும் எண்ணத்தில் ஆதரவளிப்பவர்களும் கைம்மாறு கருதாமல் சேவையாற்றும் யாவரும் சமூகத்தில் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
புரவலர்களைப் பாராட்டிய இரவு விருந்து
வடமேற்கு வட்டாரத்திலுள்ள 170,000க்கும் மேற்பட்ட வசதிகுறைந்த குடியிருப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் செயல்படும் ‘கிளப்-100 @ நார்த் வெஸ்ட்’ அமைப்பின் புரவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலையிழந்த குடும்பங்கள், வசதிகுறைந்த குடும்பங்கள் உள்ளிட்டோர்க்கு உணவுப் பொருள்கள், பயனீட்டுத் தொகை, குழந்தைப் பராமரிப்பு போன்ற பல்வேறு அத்தியாவசியச் செலவுகளுக்கு ஆதரவளிக்கப் புரவலர்கள் ஏறத்தாழ 700 பேர் தொடர்ந்து உதவிவருகின்றனர்.
அவர்களைப் பாராட்டிய இந்தச் சிறப்பு விருந்து பிப்ரவரி 13ஆம் தேதி சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமேற்கு வட்டார மேயரும் மார்சிலிங் - இயூ டி குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான அலெக்ஸ் யாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
சமூக மேம்பாட்டு மன்றம் மேற்கொள்ளும் பணிகளை மேம்படுத்தும் விதமாகச் செயல்படும் ‘கிளப்-100 @ நார்த் வெஸ்ட்’ திட்டம் குழந்தைகள், மாணவர்களுக்கான ஆதரவையும் அவசரநிலை ஆதரவையும் வழங்கும் நோக்கில் செயல்படுகிறது.
நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும் குடும்பங்கள், ஆட்குறைப்பு, தீ விபத்து உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் தற்காலிக உதவியை எதிர்நோக்கும் குடும்பங்கள், கல்வித் தேவையுள்ள இளையர்கள் ஆகியோருக்கும் இந்த ‘கிளப்-100’ உதவிவருகிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 10,000 குடும்பங்களுக்கு உதவ ஒரு மில்லியன் வெள்ளி தேவைப்படும் நிலையில் புரவலர்கள் தொடர்ந்து மாதந்தோறும் குறைந்தது 100 வெள்ளி தொடங்கி தங்களால் இயன்ற தொகையைப் பங்களிக்கின்றனர்.
வடமேற்கு வட்டாரச் சமூக மன்றம் சார்பில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘கிளப் 100’, இதுவரை 16 மில்லியன் வெள்ளி நிதி திரட்டி, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.

