புகைமூட்டச் சட்டத்தின்கீழ் அனுப்பிய அறிக்கையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள்

புகைமூட்டச் சட்டத்தின்கீழ் அனுப்பிய அறிக்கையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள்

படம்: த பிஸ்னஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 8:41 pm

2 mins read

சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட 10 நிறுவனங்கள், எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் விடுக்கப்பட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளன.

இந்தோனீசிய காட்டுத்தீச் சம்பவங்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த தகவல்களை வழங்கும்படி தேசியச் சுற்றுப்புற அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தக் கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மூன்று நிறுவனங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

அவ்வாறு, விதிமுறைகளுக்கு உட்படாத நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அபராதமோ தண்டனைகளோ விதிக்கப்படக்கூடும்.

இன்டோஃபூட் அக்ரி ரிசோர்சஸ், டிஎஸ்எச் குளோபல் பிளான்டே‌‌ஷன், டிஎஸ்எச் ஓவர்சீ ஆகியவை அந்த மூன்று நிறுவனங்கள்.

திங்கட்கிழமை (அக்டோபர் 26), இறுதியாகப் பதிலளித்த இரண்டு நிறுவனங்களான டிஎஸ்எச் குளோபல் பிளான்டே‌‌ஷன், டிஎஸ்எச் ஓவர்சீ ஆகியவை அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவற்றை மேற்பார்வையிடும் மலேசியாவின் டிஎஸ்எச் ரிசோர்சஸ் நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

காலை 8.12 மணிக்கு சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ், நவம்பர் 2ஆம் தேதிக்குள் ஆவணங்களையும் தகவல்களையும் வழங்குமாறு தங்களது துணை நிறுவனங்களுக்கு இம்மாதம் 23ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டதாக அந்த எண்ணெய் பனைத்தோட்டக் குழுமம் சொன்னது.

“அந்த அறிக்கையைப் பரிசீலித்து வருகிறோம். அதற்கேற்ப அமைப்புடன் இணைந்து செயல்படுவோம்,” என்று அது சொன்னது.

விதிமுறைகளுக்கு உட்படாத நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு $5,000 வரை அபராதம், ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின் கீழ், புகைமூட்டத்திற்குக் காரணமான அல்லது அதற்கு வழிவகுத்த குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்படும் நிறுவனங்களுக்கு புகைமூட்டம் நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அதிகபட்சமாக $100,000 வரையிலும் உச்சவரம்பாக $2 மில்லியன் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்