ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் நிறுவனங்களின் பங்கு கூடியுள்ளது: கான் கிம் யோங்

2 mins read
05059905-bfa6-4c04-8656-891162809eee
போட்டித்தன்மையோடும் மீள்திறனோடும் இருப்பதற்கு நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தையும் மனிதவள உத்திகளையும் ஒருங்கிணைப்பது முக்கியம் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் 45வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள், ஊழியர்களின் திறனை மெருகேற்றுவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். வருங்காலத்தில் அவை வகுக்கும் நல்ல உத்திகளுக்கு அதுவே அடிப்படை.

தொழில்நுட்பம், மக்கள்தொகைக் கூறுகள், பொருளியல் முதலியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் உலகில் பிரச்சினைகள் எழக்கூடும். அப்போது உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது முக்கியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.

“போட்டித்தன்மையோடும் மீள்திறனோடும் இருப்பதற்கு நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தையும் மனிதவள உத்திகளையும் ஒருங்கிணைப்பது முக்கியம்,” என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் 45வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் திரு கான் பேசினார்.

மாறிவரும் சூழலில் முதலாளிகள் சம்மேளனம் அதன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள சில அம்சங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

நிறுவனங்கள் பொறுப்புடன் வழிநடத்துவதற்கு உதவுவது, நிச்சயமற்ற சூழலை வாய்ப்பாக மாற்றுவது, அனைவரையும் அரவணைக்கும் அம்சமும் உற்பத்தித்திறனும் கொண்ட வேலையிடங்களை உருவாக்குவது ஆகியவையே அவை என்றார் திரு கான்.

நிறுவனங்கள் இடையூறுகளைச் சமாளிக்கவும் ஊழியரணியைத் துடிப்புடன் இயக்கவும் முதலாளிகள் சம்மேளனம் நான்கு வழிகளில் உதவவிருக்கிறது. துறைவாரியான புரிதலுடன் தொலைநோக்குப் பார்வையிலிருந்து நகர்ந்து செயலில் இறங்குவது, நிறுவனங்களிடையே வேலை நடைமுறைகளை மாற்றுவதைத் துரிதப்படுத்துவது, நியாயமான, நம்பகத்தன்மை மிகுந்த வேலையிடங்களை உருவாக்குவது, மனிதவளத் துறையை மேம்படுத்துவது ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள்.

“இந்த முயற்சிகள் அனைத்தும் நிறுவனங்கள், நம்பிக்கையுடன் மாற்றங்களைக் கையாளவும் வேலையிடத்தில் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பவும் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்,” என்று துணைப் பிரதமர் கான் சொன்னார்.

நிகழ்ச்சியில் திரு கானுடன் மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங், தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் கே தனலெட்சுமி, முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் டான் ஹீ டெக் முதலியோரும் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்