மறுஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: வர்த்தக, தொழில்துறை அமைச்சு

மறுஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: வர்த்தக, தொழில்துறை அமைச்சு

2 mins read
1162429b-54a4-46a4-a9be-e3903db000e7
தயாரிப்பு நாடு அல்லது பகுதி குறித்து தவறான விவரங்களை அளிப்பது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம், தண்டனைகளுக்கு வழிவகுக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் வழியாகப் பொருள்களை மறுஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், பொருள்கள் தயாரிக்கப்பட்ட நாட்டைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனங்கள் சிங்கப்பூரின் அனைத்துச் சட்டங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

சீனாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்குச் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளை மறுஏற்றுமதிக்குப் பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியிட்டது.

‘தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்’ (The Great Transshipment Scam) என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், குறைந்த வரி கொண்ட இடைநிலை நாடுகள் வழியாகச் சீனப் பொருள்களை அனுப்புவது, அவற்றின் உண்மையான தயாரிப்பு இடத்தை மறைப்பதற்காகச் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட மோசடி என்று விவரித்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தற்போது வர்த்தக, தொழில்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“சிங்கப்பூர் வர்த்தக விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுகிறது. சிங்கப்பூரின் பொருளியல் ஆற்றலுக்குக் காரணமே இங்குள்ள வலுவான சட்டம், தெளிவான விதிமுறைகள், மோசடி, ஊழல், குற்றச் செயல்களுக்குச் சிறிதும் இடம் தராத கொள்கைதான்,” என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு சொன்னது.

“ஒரு நம்பிக்கையான அனைத்துலக வர்த்தக மையமாக, சிங்கப்பூர் பல ஆண்டுகளாகச் சேர்த்த நல்ல பெயரைக் காப்பாற்றவும், நாட்டின் வர்த்தகச் சூழலின் நேர்மையைப் பாதுகாக்கவும் உறுதியுடன் உள்ளது,” என்று அமைச்சு கூறியது.

சிங்கப்பூர் சுங்கத்துறை 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அனைத்து வர்த்தகர்களுக்கும் முகவர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையை அமைச்சு சுட்டிக்காட்டியது.

சுற்றறிக்கையில் அனுமதி விண்ணப்பங்களில் பொருள்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதைச் சரியாகக் குறிப்பிடுவதன் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இறக்குமதி, ஏற்றுமதி, மறுஏற்றுமதி அனுமதி விண்ணப்பங்கள் விவரங்கள் துல்லியமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தயாரிப்பு நாடு அல்லது பகுதி குறித்து தவறான விவரங்களை அளிப்பது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் மற்றும் தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.

குறிப்புச் சொற்கள்
சீனாஏற்றுமதிஇறக்குமதி