பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்குச் சிறை

2 mins read
37b494f1-910d-433f-b711-53219a1c37c6
ரிச்சர்ட் சியுவா செங் ஃபூ நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆடவர், அந்நிறுவனத்தின் $2.5 மில்லியன் மதிப்பிலான சொத்துகளைத் தவறாகக் கையாண்ட ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ரிச்சர்ட் சியுவா செங் ஃபூவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) விதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாண்ட நிறுவனச் சொத்துகளில் ஏறத்தாழ $980,000 மதிப்புள்ள 625 கைத்தொலைபேசிச் சாதனங்களும் அடங்கும்.

எம்டிஆர் (MDR) என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றிய அவர் அந்நிறுவனத்தின் விளம்பர நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட பல சொத்துகளைத் தவறாகக் கையாண்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் சொத்துக்களை, 54 வயது ரிச்சர்ட், மூன்றாம் தரப்பு வியாபாரிகளிடம் விற்றதாகவும் ஒவ்வொரு விற்பனைக்கும் அவர்களுக்குப் பங்கு வழங்கப்பட்டது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவ்விற்பனைகளில் தமக்குக் கிடைத்த லாபத்தை அவர் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தினார்.

ஆடவர், எம்டிஆர் நிறுவனத்திடம் இதுவரை தொகை எதையும் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்மீது சுமத்தப்பட்ட இதர நான்கு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

குற்றம் நடந்த காலத்தில் ரிச்சர்ட், எம்டிஆர் நிறுவனத்தின் மற்ற மூன்று துணை நிறுவனங்களிலும் தலைமை நிர்வாகி என்ற பொறுப்பில் இருந்துள்ளார். அவற்றின் பெயர்கள், ‘மொபைல் டெலிகாம்’, ‘ஹாண்ட்ஃபோன்ஷாப்’, ‘ஏ-மொபைல்’ என்று தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில் இந்த மூன்று நிறுவனங்களும் ‘குழுமம்’ என்று அழைக்கப்பட்டன.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் அந்த ஆடவர் தற்போது பணியில் இல்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டுவரை ரிச்சர்ட் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்துள்ளார். விற்பனைக்குத் துணையாகச் செயல்பட்ட அவரது நண்பர் டான் இயு கியாம் என்ற 54 வயது ஆடவரின் வழக்கு விசாரணையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்