காவல்துறை அதிகாரியை ரகசியமாகக் கண்காணித்த நிறுவனத்துக்கு அபராதம்

காவல்துறை அதிகாரியை ரகசியமாகக் கண்காணித்த நிறுவனத்துக்கு அபராதம்

2 mins read
d9037f6e-ec09-4378-9dbe-ddb0f3f1ab9f
டான் ஹுய் டிங் என்ற 33 வயது மாது நிறுவனத்தின் முன்னாள் பங்காளி ஆவார். - படம்: ஷின்மின் சீன நாளிதழ்

காவல்துறை அதிகாரி என்று அறிந்திருந்தும் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக அவர் வாழும் வீட்டிலும் பணியிடத்திலும் அனுமதியின்றி கண்காணித்த குற்றத்துக்குத் தனியார் உளவு விசாரணை நிறுவன இணை உரிமையாளருக்கு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தண்டனை விதிக்கப்பட்டது.

அந்நிறுவனத்தின் முன்னாள் பங்காளியான டான் ஹுய் டிங் என்ற 33 வயது மாது அத்தகைய விசாரணைகளை மேற்கொள்ள உரிமம் வழங்கும் அரசாங்க அதிகாரியின் அனுமதியின்றி செயல்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு $25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த மாதும் ‘சிடிஐசி கன்சல்டன்ஸ்’ என்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டான் கொக் பூன் என்ற 58 வயது ஆடவரும் அவ்வர்த்தகத்தில் பங்காளிகள் ஆவர்.

ஒரு காவல்துறை அதிகாரியை ரகசியமாகக் கண்காணிக்கும்படி பாஹ்ய் ஹொங் யாவ் என்ற ஆடவர் 2021 நவம்பர் மாதம் அந்நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் ஆடவரது தந்தையை அக்காவல்துறை அதிகாரி ஒரு வழக்கில் விசாரித்துக்கொண்டிருந்தார்.

காவல்துறையின் கன்டோன்மன்ட் வளாகத்தில் (பிசிசி) அந்த அதிகாரி பணியாற்றுகிறார் என்று அறிந்திருந்தும் அந்த நிறுவனம் காவல்துறையின் ஒழுங்குமுறைத் துறையின் அனுமதியைப் பெறாமல் கண்காணிப்புச் செயல்பாடுகளை மேற்கொண்டது.

காவல்துறையின் கன்டோன்மன்ட் வளாகம், குடியரசின் உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் இடமாகும்.

அந்த மாது அந்த நிறுவனத்தின் பங்காளிப் பொறுப்பில் இருந்து 2025 மே மாதம் விலகிக்கொண்டதாக வர்த்தகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாண்டு ஜூலை 14ஆம் தேதி டான் கொக் பூனுக்கு $25,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு உரிமம் இன்றி உளவு பார்த்த சிடிஐசி என்ற அந்த நிறுவனத்துக்கும் $20,000 அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைஉளவுஉளவுத்துறைஅனுமதிகுற்றம்உரிமம்மாதுஆடவர்நிறுவனம்