தாதிமை இல்லத்தில் மூத்தோர், நலிவுற்றோரைச் சந்தித்து நல்லாசி வழங்கிய போப்பாண்டவர்

தாதிமை இல்லத்தில் மூத்தோர், நலிவுற்றோரைச் சந்தித்து நல்லாசி வழங்கிய போப்பாண்டவர்

2 mins read
b9292577-b456-4367-aa19-78519136df73
கத்தோலிக்க தாதிமை இல்லமான புனித தெரசா இல்லத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதியன்று போப் ஃபிரான்சிஸ் நேரில் சென்று அங்குள்ள மூத்தோர், நலிவுற்றோர், ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து நல்லாசி வழங்கினார்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கத்தோலிக்க தாதிமை இல்லமான புனித தெரசா இல்லத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதியன்று போப் ஃபிரான்சிஸ் நேரில் சென்று அங்குள்ள மூத்தோர், நலிவுற்றோர், ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து நல்லாசி வழங்கினார்.

கத்தோலிக்க சமயத் தலைவர் போப்பாண்டவரைக் காண, சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறே அங்குக் கூடியிருந்த ஏராளமான முதியோரைக் கண்டு மனமுருகினார் 87 வயதாகும் போப் ஃபிரான்சிஸ்.

தாதிமை இல்லவாசிகள் மற்றும் அவர்கள் பராமரிப்பாளர்களுடன் கனிவுடன் கைகுலுக்கிய போப்பாண்டவர், பிறகு இல்லத்தில் இருந்த சிற்றாலயத்திற்கு வருகை அளித்தார்.

இல்லவாசிகளை நோக்கி தமக்காகப் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்ட போப் ஃபிரான்சிஸ், தாமும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து அங்குக் கூடியிருந்த மூத்தோரை நோக்கி கரம் உயர்த்தி நல்லாசி வழங்கினார் போப் ஃபிரான்சிஸ்.

சிங்கப்பூரில் போப்பாண்டவர் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின் மூன்றாவது மற்றும் நிறைவு நாளான செப்டம்பர் 13ஆம் தேதி தாதிமை இல்லத்திற்கு வந்திருந்த போப் ஃபிரான்சிசை சந்தித்த இல்லவாசிகள் மிகுந்த பூரிப்புடன் நெகிழ்ச்சியாகக் காணப்பட்டனர்.

சக்கர நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்த இல்லவாசி திருவாட்டி ஃபிரிட்ஜெட், “போப்பாண்டவர் மிகவும் சிறந்த மனிதர்,” என்று குறிப்பிட்டார்.

போப்பாண்டவரைப் பார்க்க வத்திக்கான் வரை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், தங்களைப் பார்ப்பதற்காக அவரே இங்கு வரை வந்துள்ளார் என்று சொன்ன திருவாட்டி ஃபிரிட்ஜெட், “இது மிகவும் களிப்பான தருணம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்,” என்றார்.

இல்லத்தின் மனிதவள மேலாளர் திருவாட்டி கேண்டி லின், “38 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் இம்முறை போப்பாண்டவரைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று எண்ணினேன். போப்பாண்டவரை நேரில் பார்த்துவிட்டது பெரும்பேறு,” என்று அவர் கூறியதாக வத்திக்கான் செய்தி தெரிவித்தது.

“ஏறத்தாழ 88 வயதாகும் போப் ஃபிரான்சிஸ், அவரின் உடல் நலன் சார்ந்த சுகாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் பேரார்வமும், உற்சாகமும் நிறைந்தவராய் மக்களுக்காக, அவர்களை ஒன்றிணைக்கத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது வியப்பைத் தருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

போப் வரலாற்றுப் பயணத்தில் வருகை புரிந்த மேற்கூறிய கத்தோலிக்க தாதிமை இல்லம் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆதரவற்ற மூத்தோருக்கான புகலிடமாகத் திகழ்ந்து வரும் இந்த இல்லத்தில் தற்போது 80 முதல் 90 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ இருநூறு மூத்தோர் இல்லவாசிகளாக வசித்து வருகின்றனர்.

முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வருகையளித்த போப் ஃபிரான்சிஸ், தமது மூன்று நாள் பயணத்தை நிறைவுசெய்து செப்டம்பர் 13ஆம் தேதி மதியம் சிங்கப்பூரிலிருந்து ரோம் புறப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்