பிரிட்டிஷ் காலனித்துவ ஆகாயப் படையிலும் சிங்கப்பூர் ஆகாயப் படையிலும் பணியாற்றிய கனகசிங்கம் குணரத்னம், 86, தேசிய தனிப் பொதுச் சேவை விருதைப் பெற்றுள்ளார்.
நிறைவான வாழ்க்கையை அனுபவித்துள்ள அவர், கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறார்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவர், மனைவியுடன் மட்டும் அடுக்குமாடி வீட்டில் வசித்து அன்றாட நடவடிக்கைகளை இயன்றவரை செய்து வருகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி விருந்துக்காக திரு கனகசிங்கம் மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயத்திற்குச் செல்வார்.
மார்சிலிங் வட்டாரத்திற்கு 2018ல் குடிபெயர்ந்த திரு கனகசிங்கம், அந்த ஆலயத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
“ஒவ்வொரு நாளும் நான் இந்தக் கோயில் வாசலுக்கு முன் நின்று வருவேன். வாரத்திற்கு இருமுறை உள்ளே செல்வேன்,” என்று கோயிலுக்கு அருகில் வசிக்கும் திரு கனகசிங்கம் கூறினார்.
தமக்கும் தம்மைப்போன்ற வசதி குறைந்தோருக்கும் அரசாங்க உதவி வழங்கப்பட்டதைக் குறிப்பிட்ட திரு கனகசிங்கம், தீபாவளிக் காலகட்டத்தில் கொண்டாட்டத்தை நன்றியுணர்வுடன் பார்ப்பதாகக் கூறினார்.
ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம், மார்சிலிங் குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகள், உணவங்காடி சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடந்தது அந்த விருந்துக் கொண்டாட்டம்.
தொடர்புடைய செய்திகள்
மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் தற்காப்பு, மனிதவள மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாக்கால ஆதரவு உதவித் திட்டங்களுடன் ‘காம்லிங்க் பிளஸ்’, ‘மார்சிலிங் கேர்ஸ்’ போன்ற திட்டங்களால் 1,200க்கும் அதிகமான வட்டாரவாசிகள் பயனடைகின்றனர்.
பயனடைந்துவரும் வட்டாரவாசிகளில் மற்றொருவரான 50 வயது மதிக்கத்தக்க வெண்ணிலா சுப்ரமணியன், “இந்த தீபாவளி நிகழ்ச்சியை அண்டைவீட்டாருடன் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினார்.
‘காம்லிங்க் பிளஸ்’ அத்தியாவசிய செலவுகளுக்கு உதவி அளிப்பதுடன் திட்டத்தின்கீழ் குடும்பத்திற்கு வழிகாட்டுவது, பிள்ளைகளுக்கான விடுமுறை கேளிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றையும் செய்து வருகிறது.
“காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தின்மூலம் என் பணிகளுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்குவது மேம்பட்டுள்ளது. என் தன்னம்பிக்கையையும் பிள்ளைகளை ஆதரிப்பதற்கான திறன்களையும் வளர்க்க அத்திட்டம் உதவி செய்திருக்கிறது,” என்று ஒற்றைப் பெற்றோரும் இல்லத்தரசியுமான திருவாட்டி வெண்ணிலா கூறினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வண்ண மின்விளக்குகளின் ஒளியூட்டும் நடைபெற்றது. ஆலயத்தைச் சுற்றியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகிலுள்ள சாலையோரங்களில் அந்த விளக்குகள் நவம்பர் 30ஆம் தேதிவரை ஒளிரும்.