காக்கைகள் தங்களைத் தாக்கி, தலையில் கீறிவிடுவதாகத் தெம்பனிஸ் பகுதிவாசிகள் புகார் அளித்துள்ளனர்.
தங்கள் கூடுகள் அகற்றப்பட்டதை அடுத்து, காக்கைகள் இவ்வாறு பழிவாங்குவதாகப் பொதுமக்கள் நம்புவதாகக் கூறப்படுகிறது.
ஷின்மின் நாளிதழ் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, தெம்பனிஸ் ஸ்திரீட் 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் இச்சம்பவங்கள் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்லும் சிலர் காகங்களால் தாக்கப்பட்டு, தலையில் கீறப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 12-ஆம் தேதி மாலை 7 மணியளவில், வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காக்கைகளால் தாக்கப்பட்டதாக, 42 வயது திருமதி லூ என்பவர் ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
“சாலையைக் கடக்கும்போது, காக்கம் தனது அலகினால் என் தலையைக் கீறியது. மற்றொரு காகம் என் தோளைக் கொத்தியது. நான் அதிர்ச்சியடைந்து பயந்து, சத்தமாகக் அலறிச் சாலையைக் கடந்து ஓடினேன். நல்லவேளையாக, காக்கைகள் என்னைத் தொடர்ந்து துரத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
வலியால் தம் தலை மரத்துப்போனதாகவும், உடனடியாகத் தன் மகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வேறு பாதையில் வீட்டிற்கு வர எச்சரித்ததாகவும் திருமதி லூ தெரிவித்தார்.
வீட்டிற்குச் சென்றபோது, தலையில் வீக்கங்களும் சில இடங்களில் ரத்தக்கசிவும் இருந்ததைக் கவனித்த அவர், உடனடியாகக் காயங்களைச் சுத்தம் செய்துகொண்டார்.