கணினியில் தமிழ் எழுத்துருவாக்கம் என்பதைத் தொடக்கத்தில் ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தில் தாம் அணுகியதாகவும் ஆனால் அதில் ஈடுபட்ட பிறகுதான் அது மிகப் பெரிய பின்னணியைக் கொண்ட கலை என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார் மலேசியக் கணினியியல் அறிஞரும் எழுத்துருவாக்கக் கலைஞருமான திரு முத்தெழிலன் நெடுமாறன் (சுருக்கமாக முத்து நெடுமாறன்).
தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கான நேர்காணலில் இத்தகவலை அவர் பகிர்ந்துகொண்டார்.
அவரது எழுத்துருப் பயணம் குறித்த நூலை எழுதியுள்ள எழுத்தாளர் கோகிலாவும் இந்த நேர்காணலில் பங்குகொண்டார்.
கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், கைப்பேசிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கான செல்லினம் போன்ற மென்பொருள்களின் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர் முத்து நெடுமாறன்.
ஹவாயி சைவ சித்தாந்தக் கோயிலில் தமிழ் நூல் ஒன்றைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் இணைமதி எழுத்துருவில் அழகியல் அம்சம் இல்லை என்று கூறியபோது ஏற்பட்ட அதிர்ச்சிதான் பின்னர் அந்தக் கோணத்தில் தம்மைச் சிந்திக்கத் தூண்டியதாக முத்து கூறினார்.
தமிழ் எழுத்துருவாக்கம் தொடர்பில் வழிகாட்டுதல் மிகக் குறைவாகவே இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட பாதையை உருவாக்கிக்கொண்டே முன்னேற வேண்டியிருந்ததை அவர் குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளுக்குமுன் தமிழில் அச்சிடுவதற்கான உலோக அச்சுகள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்வதில் தொடங்கிய அவரது முனைப்பு தொய்வின்றித் தொடர்வதைக் கோகிலா சுட்டினார்.
தமிழுக்கு மட்டுமன்றி இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவங்களுக்கும் அவற்றுக்கும் அப்பால் தெற்காசிய மொழிகள், தென்கிழக்காசிய மொழிகளுக்கான வரிவடிவங்களுக்கும்கூட முத்து, எழுத்துருக்களை வடிவமைத்துள்ளார். பொறியியல் சார்ந்த நுட்பங்களைவிட இவர் வடிவமைத்த எழுத்துருக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
முரசு அஞ்சல் விசைப்பலகை அறிமுகம் கண்டபிறகு தமிழில் உள்ளீடு செய்யும் ஆர்வம் பயனாளர்களிடையே பன்மடங்கு உயர்ந்தது அதன் வெற்றி என்றார் முத்து.
தொழில்நுட்பமோ வழிகாட்டுதலோ அவ்வளவாக இல்லாத நிலையிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பே தேடித் தேடித் தெரிந்துகொண்டு, விடாமுயற்சியுடன் கணினியில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்த முத்து நெடுமாறனின் முனைப்பு இன்றைய இளையர்கள் இன்னும் அதிகம் பங்களிக்க வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவதற்கான ஊற்றுக்கண் என்றார் கோகிலா.
காட்சிப்படுத்தும் திரைகளை எந்த இடத்தில் கண்டாலும் அதில் தமிழ் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் மற்றவர்கள் குதிரைக்கொம்பு என்று கருதும் நடவடிக்கைகளைக்கூட மகிழ்ச்சியாகச் செய்வது தமது இயல்பு என்றார் முத்து.
கைப்பேசிகள் வந்த பிறகு அவற்றில் தமிழ், இந்தி, பெங்காலி, சிங்களம் போன்ற மொழிகளுக்கு எழுத்துரு உருவாக்கியதையும் அவர் சுவைபட எடுத்துக்கூறினார்.
அறிமுகமற்ற மொழிகளுக்கு எழுத்துரு உருவாக்குவது எப்படிக் கைவந்தது என்ற கேள்விக்கு எழுத்திலக்கணம், பல்வேறு மொழிகளின் வரிவடிவங்களுக்கு இடையிலான ஒற்றுமை, அதுதொடர்பான வரலாறு மீதான ஆர்வம்தான் காரணம் என்றார்.
பயனாளரின் பல்வேறு மன உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியதாய் எழுத்துரு இருக்கவேண்டியது அவசியம் என்ற சிந்தனைதான் விதவிதமான எழுத்துருக்களை உருவாக்கத் தூண்டியது என்றார் முத்து.
வரிவடிவத்தை ஒலியாக மாற்றக்கூடிய சொல்வன் எனும் செயலியின் சிறப்பை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
எந்தச் செயலையும் அதன் விளைவைக் கருத்தில்கொண்டு அங்கிருந்து பின்னோக்கித் திட்டமிடும் இவரது இயல்பையும் தன்னம்பிக்கையையும் குறிப்பிட்டார் கோகிலா.
எழுத்துருவாக்கத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு உதவும் ‘ஹைபிஸ்கஸ்’ எனும் இலவச மென்பொருளை வெளியிட்டுள்ள முத்து, எழுத்துருவாக்கத் துறையில் முனைவர் பட்டத்துக்கான கல்வியைத் தொடங்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.