வாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிய புதிய குறியீடு

சமூக முன்னேற்றத்தை அளவிடும் புதிய தேசியக் குறியீடு

வாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிய புதிய குறியீடு

2 mins read
9cfbe4e6-409b-4edc-8bfa-f42b1f060871
கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் ஒரு சமத்துவமற்ற சமூகமாக மாறியுள்ளதாக ஏறக்குறைய பாதியளவு சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று ‘ஆக்சஸ் சிங்கப்பூர்’ நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக இடைவெளிகளைத் தாண்டி வாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அளவிடுவதற்கான ஒரு புதிய தேசியக் குறியீடு அடுத்த ஆண்டு (2027) அறிமுகம் காணும்.

அந்தக் குறியீட்டின்வழி, சமூக முன்னேற்றம் குறித்த தகவல்கள், மேம்பாட்டுக்கு வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுப் பொதுமக்களுடனும் கொள்கைகளை வகுப்போருடனும் பகிர்ந்துகொள்ளப்படும்.

சமூகத் தொண்டூழிய நிறுவனமான ‘ஆக்சஸ் சிங்கப்பூர்’, ‘மிலியூ இன்சைட்’ ஆய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் அந்தக் குறியீட்டை உருவாக்கும்.

சிங்கப்பூரில் வருமான வளர்ச்சி, ஏற்றத்தாழ்வு, சமூக முன்னேற்றப் போக்குகள் குறித்து நிதி அமைச்சு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் பெரும்பாலோர், அவர்களின் தந்தையரைவிட அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.

அதனால் தலைமுறைக்கு இடையிலான சமூக முன்னேற்றத்தை நிலைநிறுத்துவதில் சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் பொருளியல் முதிர்ச்சியடையும்போது தலைமுறைக்கு இடையேயான முன்னேற்றத்தின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது என்றும் கண்டறியப்பட்டது.

அதன் விளைவாகச் சமூக நிலையில் முன்னேறுவதற்கு சிரமப்படும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் சமநிலையற்ற சமூகமாய் மாறியுள்ளதாகச் சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் உணர்வது ‘ஆக்சஸ் சிங்கப்பூர்’ நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் கண்டறியப்பட்டது.

சமூக வாய்ப்புகள் என்பதன் பொருள் என்ன என்பதையும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே அந்த வாய்ப்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் புரிந்துகொள்வதற்காக நிறுவனம் அத்தலைப்பை மேலும் ஆய்வு செய்ய விரும்புகிறது என்று செவ்வாய்க்கிழமை (மே 26) நடைபெற்ற ‘ஆக்சஸ்’ சமூக முன்னேற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகச் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யி காங் கலந்துகொண்டார்.

சமூக வாய்ப்புகளில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கு வலுவான அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. குறிப்பாகக் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களுக்கு நீண்டகால ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கண்டறிவதைப் பற்றியும் பல கருத்துகள் பகிரப்பட்டன.

பொருளியல் ரீதியாகச் சமூகத்தில் படிநிலைகளை நிர்ணயிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதைச் சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ தொடக்க உரையில் கூறினார்.

“தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ள முடியும் எனக் குழந்தைகள் நம்பவில்லை என்றால் அவர்களின் செயல் திறன் குறைந்துவிடும். அதன் விளைவாக நமது பொருளியல், ஆற்றலைக் குறைத்துவிடும்,” என்றார் அவர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் பொதுச் சேவைகளின் அடிப்படைத் தரத்தை உயர்த்துவதில் சிங்கப்பூர் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று திரு லோ கூறினார்.

உலகளாவிய முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, ‘ஆக்சஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்துடன் செய்துகொண்ட மூன்றாண்டு காலப் பங்காளித்துவம் பற்றியும் மாநாட்டில் அறிவித்தது.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குத் தொழில்சார் ஆதரவை அளிக்கும் புதிய இளையர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அது துணைபுரியும்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்குறியீடுவளர்ச்சிசிங்கப்பூர்முன்னேற்றம்