தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஏக்ரா’ தளத்தில் அடையாள அட்டை எண்கள்; பொதுமக்கள் கவலை

3 mins read
55b0f426-5cda-43bd-a367-7201b8a015a5
ஏக்ரா இணையத்தளத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகத்தோடு தொடர்புடையவர்களின் அடையாள அட்டை எண்களை மக்கள் அணுக முடிந்தது. - படம்: ஏக்ரா

கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Accounting and Corporate Regulatory Authority’s (Acra) தளத்தில் தனிநபர்களின் அடையாள அட்டை (NRIC) எண்களைப் பெற முடிவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகம் தொடர்புடையவர்களின் அடையாள அட்டை எண்களை மக்கள் பெற முடிந்தது.

அண்மைக்காலமாக அதிகரித்துக்கும் மோசடிகளால் வாசகர்கள் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 11 அன்று, வணிக விதிமுறைகளை அறிவதற்கும், விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்குமான தளமான ‘பிஸ்ஃபைல்’ (Bizfile) தளத்தில் உள்ள தேடல் அம்சம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

“என்னுடைய அடையாள அட்டை எண்ணை பிஸ்ஃபைலில் கண்டேன்,” என்று இல்லத்தரசியான திருவாட்டி ஜினா டான் கூறினார். மோசடிப் பேர்வழி ஒருவர் அவரது தாயை அழைத்து அவரது முகவரி, அடையாள அட்டை எண்ணைக் கூறியதை அடுத்து அவர் அந்தத் தளத்தை ஆய்வு செய்தார்.

விவரங்கள் இருந்ததால் அவை சட்டபூர்வமானவை என்று நம்பிய அவரது தாயார், மோசடிக்காரர்களுக்கு தனது சொந்த வங்கி விவரங்களை அனுப்ப இருந்த வேளையில், திருவாட்டி டான் சரியான நேரத்தில் அவரைத் தடுத்தார்.

தமது நண்பர்களின் பெயர், அடையாள அட்டை எண் விவரங்களையும் அந்தத் தளத்தில் திருவாட்டி டான் கண்டார்.

பல முக்கிய வணிகர்கள், அமைச்சர்களின் முழுப் பெயர், அடையாள அட்டை எண் விவரங்களை பிஸ்ஃபைலின் இணையத்தளத்தில் டிசம்பர் 12 அன்று இலவசமாக பெற முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஒரு பெயருக்கு $33 கட்டணத்தில், முழு விவரங்களுடன் அவர்களின் பட்டியலிடப்பட்ட வணிக முகவரி, தற்போதைய நியமனங்கள், கடந்தகால நியமனங்கள் என அனைத்துத் தகவல்களையும் பெற முடிந்ததாகவும் அது சுட்டியது.

“நான் இந்தப் புதிய புதிய அம்சத்தை அறிந்தவுடன், அது பற்றி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்குத் தகவல் கொடுத்தேன் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் முன்னாள் இணை ஆசிரியர் பெர்த்தா ஹென்சன் ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்ததாக மதர்ஷிப் செய்தித்தளம் குறிப்பிட்டிருந்தது.

பிஸ்ஃபைல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புதிய இயங்குதளம், சில நாள்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 9ஆம் தேதி அன்று மட்டுமே நேரலையில் வந்ததால், அது ஒரு தடுமாற்றமாக இருந்திருக்கலாம் என்று திருவாட்டி பெர்த்தா நம்பினார்.

“எனக்கு தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தின் (PDPC) அதிகாரி ஒருவரிடமிருந்தும் அழைப்பு வந்தது. அவர் ‘ஏக்ரா’வுக்கு தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் (PDPA) பொருந்தாது என்று என்னிடம் சொல்ல முயன்றார்,” என்று பெர்த்தா குறிப்பிட்டிருந்தார்.

“அதைப் பற்றி எனக்குத் தெரியும் என்று நான் சொன்னேன். ஆனால் அடையாள அட்டை எண்கள் மிக எளிதாகப் பெறக்கூடியதாக இருக்க முடியாது. அடையாளத்தை உறுதிசெய்யும்போது அடையாள அட்டை எண்களில் ஒரு பகுதியைத்தான் கொடுப்பது என்பது நடைமுறையில் இல்லையா?,” என்று தாம் கேட்டதாகத் தெரிவித்தார்.

ஏக்ரா இயங்குதளத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில், “வர்த்தகங்களுடன் தொடர்புடைய நபர்களைத் தெளிவாக அடையாளம் காண அனுமதிக்கும் பொருட்டு, அடையாள அட்டை எண்கள் மறைக்கப்படாது,” என்று ஏக்ரா விளக்கியது.

“முழு அடையாள எண்களை வழங்குவதன் மூலம், சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த ஏக்ரா உதவுகிறது,” என்று அது மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்