ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) முதல் மே 18 வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பித்தியாம் கடைகளில் மே 1 முதல் மே 31 வரையிலும் என்டியுசி யூனியன் உறுப்பினர்களும் லிங்க் உறுப்பினர்களும் விலைத் தள்ளுபடிகளைப் பெறலாம்.
எதிர்வரும் மே தினக் கொண்டாட்டங்களையும் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும் நாட்டில் உள்ள அனைத்து ஊழியர்களையும் கௌரவிக்கவும் ஃபேர்பிரைஸ் குழுமம் இந்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது.
2025ல் தனது உறுப்பினர்களுக்கு $5 மில்லியனுக்கும் அதிகமான சேமிப்புகளை வழங்க தான் கடப்பாடு கொண்டுள்ளதாக ஃபேர்பிரைஸ் தெரிவித்தது. ஆண்டுதோறும் இடம்பெறும் அதன் மே தின இயக்கத்துக்காக தான் கடப்பாடு கொண்டுள்ள ஆகப்பெரிய தொகை இது என அக்குழுமம் கூறியது.
இந்த இயக்கம் நடப்பில் இருக்கும் காலத்தில், அன்றாட அத்தியாவசியப் பொருள்களில் சிங்கப்பூரர்கள் 50 விழுக்காடு விலைக் கழிவைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பித்தியாம் கடைகளிலும் அவர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம்.
ஏப்ரல் 24 முதல் மே 18 வரை, நான்கு வாரங்களுக்கு வியாழக்கிழமைகளில் புதிய அத்தியாவசியப் பொருள் ஒன்றில் என்டியுசி யூனியன், லிங்க் உறுப்பினர்கள் 50 விழுக்காட்டு விலைக் கழிவைப் பெறலாம். ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் இணையத்தளத்திலும் இந்தச் சலுகை பொருந்தும்.
விலைக் கழிவைப் பெற, கட்டணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் தங்களது ‘லிங்க் ரிவார்ட்ஸ்’ அல்லது என்டியுசி யூனியன் அட்டையைக் காண்பிக்க வேண்டும்.
அடுத்தடுத்த மே தின தள்ளுபடிகள் மே 1, 8, 15 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
இதற்கிடையே, மே 1 முதல் 31 வரை தீவு முழுவதும் உள்ள 70 கோப்பித்தியாம் கடைகளில் 50 காசுக்கு காப்பி அல்லது தேநீர் விற்பனையை மீண்டும் கொண்டுவர கோப்பித்தியாமுடன் ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் கைகோக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இச்சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்களது என்டியுசி யூனியன் சில்வர் அட்டை அல்லது மின்பற்றுச்சீட்டைக் காட்டி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் செயலி மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.