தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் ரோடு சண்டையில் ஈடுபட்டோர்மீது குற்றச்சாட்டு

2 mins read
d9cdf069-ab1a-4da0-a866-b6df3d5a4e9b
சண்டையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த சண்டையில் முகம்மது இஸ்ராட் முகம்மது இஸ்மாயில், 29, என்பவர் உயிரிழந்த வழக்கில் 29 வயது அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாரன்மீது செவ்வாய்க்கிழமை கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் கன்கார்டு சிங்கப்பூர் ஹோட்டலும் பேரங்காடியும் அமைந்துள்ள 100 ஆர்ச்சர்ட் ரோடு என்ற முகவரியில் ஞாயிறு காலை 6 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

மோசமாகக் காயமுற்ற திரு முகம்மது இஸ்ராட் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 23 வயதான மற்றோர் ஆடவர் சுயநினைவுடன் இருந்தார் எனச் சொல்லப்பட்டது.

கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஸ்வேன் விசாரணைக் காவலில் உள்ளார். அவர் காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்காக திரு ரியாச் ஹுசைன் நீதிமன்றத்தில் வழக்காடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய காவல்துறை பிரிவின் விசாரணைக் காவலில் இருக்கும் அஸ்வேனை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல வட்டார நீதிபதி அனுமதி வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பில், செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்ட எழுவர் உட்பட மேலும் பத்துப் பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 30 வயது முகம்மது ஷாருல் நிஜாம் உஸ்மான்மீது ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர், கத்தியால் 27 வயது விஷ்ணு சூரியமூர்த்தியின் மார்பில் காயப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டதாக விஷ்ணுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மார்பில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கிகிச்சை முடிந்ததும் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

கவிந்த் ராஜ் கண்ணன், 24, அருண் களியப்பெருமாள், 32, மனோஜ்குமார் வேலாயநாதம், 31, ஸ்ரீதரன் இளங்கோவன், 28, அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாறன், 29, விஷ்ணு சூரியமூர்த்தி, 27, ஆகியோர் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பலைச் சேர்ந்த ஒருவர் அல்லது ஒருவருக்குமேல் ஆயுதங்களை வைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது திரு இஸ்ராட் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா சுப்பிரமணியம், 32, மர்வின் வெரில் டாவுத், 28, சிஜேஷ் அசோகன், 25, ஆகிய மூவர்மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆயுதத்தைக் கொண்டு சண்டையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மற்ற ஐவர்மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்பட்ட எட்டுப் பேரின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 29ஆம் தேதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஸ்வேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆயுதம் கொண்டு சண்டையிட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்