குடியிருப்பு வாடகை உயர்வு மெதுவடையும்

குடியிருப்பு வாடகை உயர்வு மெதுவடையும்

2 mins read
42acd093-2ee4-414a-9be1-6d7e3987c3a3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குடியிருப்பு வாடகை உயர்வு வரும் காலாண்டுகளில் மெதுவடையக்கூடும்.

அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் வேளையில் வாடகைக்கான தேவையும் மிதமடையும் என்பதே இதற்கான காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தெரிவித்தது.

குறிப்பிடத்தக்க அளவில் குடியிருப்புத் தொகுதிகளின் கட்டுமானம் முடிவடைந்திருப்பதால், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தங்கள் வாடகை வீட்டைவிட்டு புதிய இல்லங்களுக்குச் செல்லக்கூடும்.

தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்கப்பூரில் வாடகை சந்தை பற்றி மேற்கொண்ட ஆய்வின் விவரங்கள் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஈராண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் அதன் விரிநிலைப் பொருளியல் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து வாடகை வீடுகளைப் பார்வையிடுதலும் வீட்டு விற்பனை குறித்து விசாரிப்புகளும் குறைந்துள்ளன என்று சொத்துச் சந்தை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை 38% அதிகரித்துள்ளது. தனியார் வீடுகளின் வாடகை 43% உயர்ந்துள்ளது.

2022ல் தனியார் தரை வீடுகளுக்கான வாடகை 28.1% உயர்ந்த நிலையில், கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை 29.8% உயர்ந்தது.

இதற்கிடையே, வீவகவின் ஐந்தறை வீடுகளுக்கான வாடகை 29.5 விழுக்காடும் மூவறை வீடுகளுக்கான வாடகை 24.6 விழுக்காடும் ஏற்றம் கண்டன.

2021 முதல் குடியிருப்பு வீடுகளுக்கான வாடகை மேல்நோக்கிய வேகத்தில் சென்றதற்கு, கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய அதிகப்படியான தேவை-விநியோகச் சமநிலையின்மையே காரணம் என்று அறிக்கை கூறுகிறது.

"இப்படிப்பட்ட சந்தை சமநிலையின்மை இப்போது மெதுவடைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து அது இவ்வாண்டும் மெதுவடையும்," என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அறிக்கை சொன்னது.

குறிப்புச் சொற்கள்