பழைய கொண்டோமினிய (கூட்டுரிமை) வீடுகளின் பராமரிப்பு சிக்கல்களைச் சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகள் குடியிருப்பாளர்கள், நிர்வாக முகவர்களால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.
எனினும் அவற்றைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்ற உறுப்பினர்கள் சிலர், அரசாங்கம் மின்தூக்கி மேம்பாட்டுச் செலவுகளுக்கு இணை உதவி வழங்கும்போது, மானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடியிருப்புப் பேட்டைகளைப் பழுதுபார்க்கும் பணிகளைத் தள்ளிப்போடக்கூடும் என்று கூறினர்.
அதேவேளையில், கட்டடத்தில் வசிக்கும் உரிமையாளர்களுக்கும் அதை வாடகைக்கு விட்டிருப்பவர்களுக்கும் வெவ்வேறு முன்னுரிமைகள் இருக்கலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டினர்.
சிங்கப்பூரில் அதிகமான தனியார் குடியிருப்பு மேம்பாடுகள் 30 ஆண்டு காலத்தைக் கடக்கும் நிலையில், கட்டடப் பராமரிப்புச் (கூட்டுரிமை நிர்வாகம்) சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்கிறது.
இதுபோன்ற 3,750 பராமரிப்பு மேம்பாடுகளில், பராமரிப்பு காணும் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் குறைந்தது 30 ஆண்டுகள் பழைமையானவை.
அத்தியாவசியப் பணிகளுக்கான ஒப்புதல் வரம்பைக் குறைத்தல், மாற்று பிரதிநிதித்துவத்தை வீட்டிற்கு ஒன்று என வரம்புக்குட்படுத்துதல், கட்டடக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பயிற்சி பெறக் கோருதல் மற்றும் கூட்டுரிமை மேலாண்மை நிர்வாகச் சங்க நிதிகள் சார்ந்த தகவல்களை வெளியிடுதல் ஆகியவை முன்மொழியப்பட்ட மாற்றங்களில் சில.
பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, நாடாளுமன்றத்தில் மார்ச் 4 அன்று முன்மொழியப்பட்ட அந்த நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கொண்டோமினியம் மற்றும் பிற தனியார் கட்டடங்களுக்கான மின்தூக்கி, நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) ஆகியவற்றின் பாதுகாப்பு மேம்பாடுகளுக்கு பகுதி நிதியளிப்பதா என்பது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் குமாரி இந்திராணி கூறினார்.
இதற்கிடையே தனியார் குடியிருப்புகளுக்கு மானியம் வழங்க பரிசீலிப்பது துணிவுமிக்க நடவடிக்கை என்று சில குடியிருப்பாளர்கள் கூறினாலும் ஒரு சிலரோ மானியங்களை நம்பியிருப்பது குறித்து அக்கறை எழுப்பினர்.

