சாங்கி விமான நிலைய முனையம் 4ல் ஜனவரி 1ஆம் தேதி பயணிகளிடையே ஏற்பட்ட குழப்பம் குறித்து சாங்கி விமானநிலையக் குழுமம் விளக்கி உள்ளது.
அது ஒரு ‘பாதுகாப்பு தொடர்பான சம்பவம்’ என்று அது குறிப்பிட்டுள்ளது. அந்தச் சம்பவம் ஏற்பட்ட சூழல் குறித்து மறுஆய்வு செய்து வருவதாகக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார். மேலும், பயண நடைமுறையைப் பலப்படுத்தவும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யவும் விமானநிலையப் பங்காளிகளுடன் அணுக்கமாகக் குழுமம் பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 1ஆம் தேதி இரவு 9.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர்ஏஷியா ஏகே721 விமானம், 23 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.18 மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்தடைந்தது. அதேவேளை, கோலாலம்பூர் செல்லவேண்டிய ஏர்ஏஷியா ஏகே-720 விமானமும் ஒரு மணி நேரம் 11 நிமிட தாமதத்தைச் சந்தித்தது.
கோலாலம்பூரிலிருந்து வந்த பயணிகளும் இங்கிருந்து கோலாலம்பூர் செல்ல வேண்டிய பயணிகளும் ஒரே பகுதியைப் பயன்படுத்தியதால் திடீரென்று குழப்பம் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என்று அறியாத பயணிகள் குழம்பிப்போனதாக சீன நாளிதழான சாவ்பாவ் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், சம்பவம் குறித்து அறிந்ததும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி குழப்பத்தைத் தீர்த்ததாக குழுமத்தின் பேச்சாளர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
பயணிகளைத் தற்காலிகமாக வெவ்வேறு இடங்களில் தங்கவைத்து நிலைமையைச் சரிசெய்ததாகவும் வந்திறங்கிய பயணிகளுக்கு, பயணப் பெட்டி சேகரிப்புப் பகுதியில் சிற்றுண்டி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

