இறைமுழக்கங்கள் எதிரொலிக்க, பொது விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை (மே 1) காலை 9.30 மணியளவில் ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயத்தின் மூன்றாவது குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஏறத்தாழ 15,000 பேர் விழாவில் பங்கேற்று இறை தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அன்னதானப் பணிகளை மேற்கொள்ளவும் 600க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பங்காற்றினர்.
ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கிய யாகசாலை வழிபாடுகள் மே 1 அதிகாலை 5 மணிக்கு எட்டாம் காலப் பூசையுடன் நிறைவடைந்தன. காலை 8.15 மணிக்குக் கலசப் புறப்பாடு நடைபெற்றது. சிவஸ்ரீ டாக்டர் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் கொண்ட கலசங்களைத் தலையில் சுமந்து கோபுரம் நோக்கிச் சென்றனர்.
அப்போது மழை பெய்யத் தொடங்கிய போதிலும், பக்தர்களின் உற்சாகம் சற்றும் குறையவில்லை. சடங்குகள் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட வண்ணம் தங்குதடையின்றி நடைபெற்றன.
சரியாக 9.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கும் விமானக் கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மூலவர், இதர தெய்வங்களுக்கு குடமுழுக்கும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இவ்விழாவில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்கள் ஜெகதீஸ்வரன் ராஜு, சான் ஹுய் யூஹ் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களின் முன்னணியில், ஆலயத்தின் மூன்றாவது குடமுழுக்கு நினைவுப் பலகையைத் திறந்துவைத்தனர்.
1900களின் தொடக்கத்தில் சிராங்கூன் வட்டாரத்தில் அரசமரத்தடியில் உருவான இவ்வாலயம் நூற்றாண்டுப் பெருமை கொண்டது. தற்போதைய குடமுழுக்கிற்காக ஆலயம் ஈராண்டு காலமாகப் புதுப்பிக்கப்பட்டது.
பக்தர்கள் தாங்களாகவே அபிஷேகம் செய்ய புதிய ஆத்மலிங்கம், முனீஸ்வரரின் ஏழு அவதாரங்களைக் குறிக்கும் வண்ணமயமான சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், நவீன கண்ணாடி மேற்கூரைகள் எனப் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அதிகமான பக்தர்கள் பங்கேற்க ஏதுவாக, விழாவைப் பொது விடுமுறை நாளில் நடத்த விரும்பியதாக ஆலய மேலாண்மைக் குழு உறுப்பினர் யோகநாதன் அம்மையப்பன், 56, கூறினார்.
“கடந்த 2000, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த குடமுழுக்கு விழாக்களைப் போலல்லாமல் இம்முறை மழை இறையன்பர்களின் நடமாட்டத்தைப் பாதிக்கவில்லை. இருப்பினும், குடைகள், ஒருமுறை பயன்படுத்தும் மழையங்கிகளுடன் (poncho) நாங்கள் தயாராகவே இருந்தோம். குடமுழுக்கின்போது மழை பெய்வதை இறைவனின் தரிசனமாகவே கருதுகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
26 பேர் கொண்ட தங்கள் ஏற்பாட்டுக் குழுவினர் பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து யாகசாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டதாக கடந்த 42 ஆண்டுகளாக ஆலயத்தில் தொண்டாற்றி வரும் ஆலய மேலாண்மைக் குழு உறுப்பினர் சா. ராஜன், 62, கூறினார்.
சிவன் கோவிலில் 15 ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவரும் திருவாட்டி உமா ராஜாராம், 56, இவ்விழாவில் கோவில் வரிசையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், அனைத்தும் சுமுகமாக நடைபெற்றதாகக் கூறினார்.
சக்கர நாற்காலியில் வந்திருந்த திரு விஜயன் வெள்ளைசாமி, 68, அனைவரையும் உள்ளடக்கிய விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார்.
“சக்கர நாற்காலியில் வருபவர்களுக்குத் தனி வழி அமைத்துக் கொடுத்தது மிகவும் உதவியாக இருந்தது. சிறப்புச் சீட்டு எனக்கு இல்லாவிட்டாலும் தொண்டூழியர்களும் ஆலய நிர்வாகமும் என்னை மிகச் சிறப்பாகக் கவனித்து உதவிகள் செய்தனர்.
“கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றும்போது மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன், அதேபோல நடந்தது. தெய்வம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்யத் தடுப்புக்கம்பிகள் மூலம் வரிசைகள் முறைப்படுத்தப்பட்டன.
மேலும், பக்தர்கள் முதலில் இறை தரிசனம் செய்துவிட்டுப் பிறகு அன்னதானம் உட்கொள்ளவோ அல்லது முதலில் உணவருந்திவிட்டுப் பிறகு வரிசையில் நின்று இறைவனை வழிபடவோ இருவழித் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.
சமையலுக்கான காய்கறிகள் நறுக்கும் பணிகள் முதல்நாள் இரவு 7 மணிக்கே ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதி அதிகாலையில் சமையல் பணிகள் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்னதானப் பிரிவில் உணவு பரிமாற உதவிய தொண்டூழியர் மணி சுகுணா, 55, பக்தர்கள் வயிறு நிறைந்து செல்வதைப் பார்க்கும்போது மிகவும் பூரிப்பாக இருந்ததாக கூறினார்.
“கூட்ட நெரிசலே இல்லாமல் அமர்ந்து பார்க்கும் வகையில் குடமுழுக்கு ஏற்பாடுகள் மிகுந்த மனநிறைவு அளித்தன. அன்னதானப் பிரிவிலும் உணவு பரிமாறுபவர்கள் மிகவும் அன்பாக உபசரித்தனர்,” என்றார் ஜோகூரிலிருந்து தம் குடும்பத்தினருடன் வந்திருந்த இல்லத்தரசி சிவா சுமிதிரா, 38.
இந்தக் குடமுழுக்கைத் தொடர்ந்து, மே 2ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து அடுத்த 48 நாள்களுக்கு நாள்தோறும் மண்டலாபிஷேகப் பூசைகள் நடைபெறும்.

