தெங்காவில் 8,800 ‘பிடிஓ’ வீடுகளின் கட்டுமானம் நிறைவு

2 mins read
12ebac60-6622-41e4-a43a-2c0921790b15
கார்டன் கோர்ட்@தெங்கா. - படம்: டீம்பில்ட் என்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட்

தெங்காவில் இதுவரை விற்பனைக்கு விடப்பட்ட 23,000 வீடுகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு, அதாவது 8,800க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) தெரிவித்துள்ளது.

தெங்காவில் உள்ள ஐந்து குடியிருப்புப் பகுதிகளில் இரண்டாவதாகக் கட்டப்படும் கார்டன் வட்டாரத்தில் குடியிருப்பாளர்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். முதலாவதாக முடிக்கப்பட்டது பிளான்டேஷன். கட்டுமானத்தில் உள்ள மற்ற மூன்று வட்டாரங்கள் பார்க், பிரிக்லேண்ட், ஹில் ஆகியவையாகும்.

கார்டன் வட்டாரத்தில் உள்ள 2,936 வீடுகளுக்கான சாவிகளை உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட 3,306 வீடுகளில் அது 89 விழுக்காடு ஆகும்.

நவம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி, பிளான்டேஷன், கார்டன் வட்டாரங்களில் உள்ள தேவைக்கேற்ப கட்டப்படும் (BTO) எட்டுத் திட்டங்களின்கீழான மொத்தம் 7,921 வீடுகளுக்கு உரிமையாளர்கள் சாவிகளைப் பெற்றுவிட்டதாக வீவக தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கோல் புதிய வீவக குடியிருப்பு உருவாக்கப்பட்டதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைவான கார்களைக் கொண்ட ‘காடு’ நகரமாக, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 700 ஹெக்டேர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் புதிய வீவக குடியிருப்பு தெங்கா ஆகும்.

ஐந்து வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள தெங்கா நகரம் முழுமையடையும் போது சுமார் 42,000 புதிய வீடுகளைக் கொண்டிருக்கும்.

தெங்காவின் கார்டன் வட்டாரத்தில் 80 ஹெக்டேர் பரப்பளவில், 6,500 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

கார்டன் ஃபார்ம்வே எனப்படும் 900மீ நீளமுள்ள பசுமை இணைப்பின் ஒரு பகுதி, விளையாட்டுத் திடல்கள், தோட்டங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகளுடன் குடியிருப்பாளர்களை இணைக்கிறது. இது இந்த மாதம் (நவம்பர்) திறக்கப்பட்டது.

மற்றொரு பகுதி 2025ன் முதல் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

கார்டன் வட்டாரத்தில் உணவங்காடி, பல்பொருள் அங்காடி போன்றவை 2025ன் முதல் காலாண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 கடைகள், உணவகங்கள் பிளான்டேஷன் பிளாசாவில் திறக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்துள்ளது. ஜயன்ட் பல்பொருள் அங்காடி, உணவு நிலையம், மெக்டோனல்ட்ஸ் ஆகியவை ஜூன் மாதத்தில் அங்கு திறக்கப்பட்ட முதல் வணிகங்களாகும்.

பிளான்டேஷன் வட்டாரத்தில் இரண்டு பாலர்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு, 2025ல் திறக்கப்பட உள்ளன. கார்டன் வட்டாரத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பிடிஓ திட்டத்திலும் பாலர்பள்ளிகளை படிப்படியாகத் திறக்க ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு முகமையுடன் இணைந்து செயல்படுவதாக வீவக தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு இப்போது நான்கு பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.

தெங்கா நகரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதால், தெங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் வசதிகள், உள்கட்டமைப்புகள், குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வதற்கும், தற்போதுள்ள வீவக நகரங்களின் அதே அளவிலான வசதியை வழங்குவதற்கும் விரிவுபடுத்தப்படும் என்று வீவக கூறியது.

குறிப்புச் சொற்கள்