சிங்கப்பூரின் கட்டுமானச் செலவு தொடர்ந்து அதிகமாக நீடிப்பதாகவும் அடுத்த ஆண்டு அது இன்னும் அதிகரிக்கவிருப்பதாகவும் ‘ஜேஎல்எல்’ எனும் அனைத்துலக ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டிலிருந்து கட்டுமானச் செலவு 30.2 விழுக்காடு உயர்ந்துள்ளது என்ற நிறுவனம், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலைகள், ஊழியர் பற்றாக்குறை, நிலப் பற்றாக்குறை ஆகியவற்றால் அந்தச் செலவு இன்னும் அதிகரிக்கும் என்றது.
2027ஆம் ஆண்டின் ஒப்பந்தப் புள்ளி விலை பணவீக்கம் 2.3லிருந்து 3.3 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகக் ‘ஜேஎல்எல்’ நிறுவனம் குறிப்பிட்டது.
இதற்குமுன் அந்த விலை பணவீக்கம் 2.5லிருந்து 3.5 விழுக்காட்டிற்கு இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கட்டுமானச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்து வந்ததைத் தொடர்ந்து அந்த விலையேற்றத்தின் வேகம் சற்று தணிந்துள்ளது.
புவிசார் அரசியல் சார்ந்த இடையூறுகளும் விநியோகத் தொடர் பாதிப்புகளும் தொடர் அழுத்தத்திற்குக் காரணம் என்று ‘ஜேஎல்எல்’ அனைத்துலக கட்டுமானச் செலவுக் குறியீடு 2026 தெரிவித்தது.
திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான பற்றாக்குறை, தரவு நிலையங்கள், நவீன உற்பத்தி ஆலைகள் ஆகிய சிறப்புமிக்க வசதிகளுக்கான அதிகரிக்கும் தேவைகளும் செலவு அதிகரிப்பிற்குப் பங்களித்ததாக குறியீடு சுட்டியது.
தொழில்துறை, தளவாடச் சொத்துக்களுக்கான சராசரி உலகளாவிய கட்டுமானச் செலவு ஒரு சதுர மீட்டருக்கு 1,010 அமெரிக்க டாலரிலிருந்து 1,560 அமெரிக்க டாலர்வரை இருக்கும் என்று ‘ஜேஎல்எல்’ மதிப்பிடுகிறது.
சிங்கப்பூரும் கூடுதல் செலவுச் சுமையை எதிர்கொள்கிறது. இங்குக் கிடங்கு, தளவாடக் கட்டுமானச் செலவுகள் 2026ஆம் ஆண்டில் ஒரு சதுர மீட்டருக்கு 1,324 முதல் 1,702 அமெரிக்க டாலராக இருக்கும் என்றும், 2027ஆம் ஆண்டில் 1,366 முதல் 1,756 அமெரிக்க டாலராக உயரும் என்றும் ‘ஜேஎல்எல்’ சொன்னது.
சிங்கப்பூர் தனது கட்டுமானப் பொருள்களுக்கு முற்றிலும் இறக்குமதியையே சார்ந்திருப்பதால் உலகளாவிய விலை மாற்றங்களின் தாக்கம் இங்கு அதிகம் காணப்படுகிறது என்று ‘ஜேஎல்எல்’ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரப் பணிக் கட்டமைப்பு ஆராய்ச்சி இயக்குநர் திருவாட்டி சுவேதா சவுத்ரி கூறினார்.
“எரிசக்தி விலையின் நிலையற்ற தன்மை, போக்குவரத்து இடையூறுகள், மூலப்பொருள்களின் செலவு ஆகியவை வட்டாரப் புள்ளி விலையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்ற அவர், ஒப்பந்ததாரர்கள் புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மையை ஒரு தற்காலிக நடவடிக்கையாகக் கருதாமல் திட்டங்களில் நிரந்தர இடர் இழப்பீட்டுத் தொகையாகக் கணக்கிட்டுச் சேர்த்து வருவதாக விளக்கம் அளித்தார்.
அந்தத் தாக்கம் மூலப்பொருள்களின் விலையில் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டின் முற்பாதியில் 2025ஆம் ஆண்டின் சராசரியைவிட மூலப்பொருள் செலவு 7.43 விழுக்காடு அதிகரித்தது.
‘ஜேஎல்எல்’ நிறுவனம் கண்காணித்த ஆசிய-பசிபிக் சந்தைகளிலேயே அதுதான் மிக அதிகமான உயர்வு.
சிங்கப்பூரில் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்பவர்களைப் பொறுத்தவரைத் திட்ட உரிமையாளர்கள் தற்போதைய நேரடிச் செலவுத் தரவுகளின் அடிப்படையில் திட்டத்தின் சாத்தியக்கூறுகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வடிவமைப்பு, கொள்முதல் கட்டத்திலும் அதனை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ‘ஜேஎல்எல்’ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரச் செலவு ஆலோசனை, செலவு மேலாண்மைத் தலைவர் டேனியல் மலாக்கினி அறிவுறுத்தினார்.
