சிங்கப்பூரில் கட்டுமானத் தேவை அதிகரித்துவரும் வேளையில், 2025ல் $47 பில்லியன் முதல் $53 பில்லியன் வரை மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
2024ல் $44.2 பில்லியன் மதிப்புடைய ஒப்பந்தங்களைவிட இது அதிகம் என்று ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 23) கூறியது. பெரிய அளவிலான பொது உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டதும் பொது, தனியார் வீடமைப்பு மேம்பாடும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றது ஆணையம்.
இத்தகைய திட்டங்களிலிருந்து வாய்ப்புகளைக் கைப்பற்ற மேம்பாட்டாளர்கள், ஆலோசனைச் சேவை நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் இன்னும் அணுக்கமாகச் சேர்ந்து செயல்படும்படி தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறைகூவல் விடுத்தார்.
2025ல் கட்டுமானத் தேவையை முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களில் பொது வீடமைப்பு புதுப்பிப்புப் பணிகள், சாங்கி விமான நிலையம் முனையம் 5 கட்டுமானம், மரினா பே சேண்ட்ஸ் விரிவாக்கம் உள்ளிட்டவை அடங்கும்.
2026 முதல் 2029 வரை ஒட்டுமொத்த கட்டுமானத் தேவை ஆண்டுதோறும் சராசரியாக $39 பில்லியனுக்கும் $46 பில்லியனுக்கும் இடைப்பட்டு இருக்கும் என ஆணையம் எதிர்பார்க்கிறது.
குறுக்குத் தீவு பாதையின் மூன்றாம் கட்டம், சுங்கை காடுட் வரை டௌன்டவுன் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட எம்ஆர்டி திட்டங்கள், பொது வீடமைப்புத் திட்டங்கள் போன்ற மேம்பாடுகளால் நடுத்தர காலத்தில் கட்டுமானத் தேவைக்கு வலுச்சேர்க்கப்படும்.
2030களின் நடுவில் சாங்கி விமான நிலையம் முனையம் 5ன் கட்டுமானம் நிறைவு செய்யப்பட்ட பிறகு ஒட்டுமொத்த கட்டுமானத் தேவை மிதமடையக்கூடும் என்று ஆணையம் கூறியது.
இதற்கிடையே, கூடுதல் மின்னிலக்கமயம், தானியக்கமயத்தைக் கடைப்பிடித்தல், அணுக்கமாகச் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்க மேம்பாட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆலோசனைச் சேவை நிறுவனங்களை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘கோர்நெட் எக்ஸ்’ தளம் மூலம் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான செயல்முறையைச் சீரமைக்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
வரும் அக்டோபரிலிருந்து, கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள், குறைந்தது 30,000 சதுர மீட்டர் மொத்த தரைப் பரப்பளவைக் கொண்ட அனைத்துப் புதிய திட்டங்களுக்கும் ‘கோர்நெட் எக்ஸ்’ தளம் மூலம் ஒழுங்குமுறைச் சமர்ப்பிப்புகளைச் செய்வது கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
2026 அக்டோபரிலிருந்து, புதிய திட்டங்களின் அளவு எதுவாக இருப்பினும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும். இறுதியாக 2027 அக்டோபருக்குள், நடப்பில் உள்ள அனைத்துத் திட்டங்களும் ‘கோர்நெட் எக்ஸ்’ தளத்தில் சேர வேண்டும்.
2023 டிசம்பரில் முன்னோட்டமாக அறிமுகம் கண்ட இத்தளம், ஒரே தளம் வழியாக ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை மூன்று கட்டங்களுக்குச் சீரமைக்கிறது.
கட்டுமானத் திட்டங்களுக்கு அரசாங்க அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான நேரத்தை இது ஏறக்குறைய 20 விழுக்காடு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

