சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானக் குத்தகைகள் அதிகரிப்பு

2 mins read
e4f080f9-a0cd-4cd4-b035-b28641a26dcc
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

சிங்கப்பூரில் இவ்வாண்டு $47 பில்லியனிலிருந்து $53 பில்லியன் மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், விரிவாக்கப்படும் மரினா பே சேண்ட்ஸ் ஆகியவை அந்தக் கட்டுமானங்களில் அடங்கும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டுமானக் குத்தகைகளின் மதிப்பு அதிகம் என்றது ஆணையம். 2024ஆம் ஆண்டு $44.6 பில்லியன் மதிப்பிலான கட்டுமானக் குத்தகைகள் வழங்கப்பட்டன.

2027ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டுமானக் குத்தகைகளின் மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் $46 பில்லியனான இருக்கும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் மதிப்பிடுகிறது.

இதற்கிடையே, தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கட்டுமானக் குத்தகைகளுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

மறுமேம்பாடு காணும் கென்ட் ரிட்ஜ் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, பல்வேறு தொடக்கக் கல்லூரிகளின் மேம்பாட்டுப் பணிகள், புதிதாகக் கட்டப்படவிருக்கும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக வளாகம் ஆகியவற்றாலும் கட்டுமானக் குத்தகைகளுக்கான தேவை அதிகரிக்கும்.

கட்டுமானக் குத்தகைகளுக்கான தேவை அதிகரித்தாலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்துலகப் பொருளியல் ஆபத்துகளால் அது மாறக்கூடும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் எச்சரித்தது.

உருமாற்ற முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் நேரம், பணம், மனிதவளம் ஆகியவற்றை மிச்சப்படுத்தத் தொழில்நுட்பத்தையும் மின்னிலக்கக் கருவிகளையும் பயன்படுத்தவேண்டும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

கட்டட, கட்டுமான ஆணையமும் சிங்கப்பூர்ச் சொத்து மேம்பாட்டுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாநாட்டில் திரு சீ பேசினார். கட்டுமான நிறுவனங்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றார் அவர்.

“முன்னிருந்ததைப்போல செயல்பட்டால் கூடிய விரைவில் வளப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அது புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடும்,” என்ற அவர், கட்டுமானத் துறைக்கு ஆதரவளிக்கும் சில திட்டங்களை அறிவித்தார்.

அவற்றுள் ஒன்று உற்பத்தித் தீர்வுக்கான மானியம். அது ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்குவரும். உற்பத்தியை வலுப்படுத்த நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மானியம் உதவுகிறது.

அரசாங்கத் துறைக்கான ஆலோசகர்கள் குழு இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஓராண்டு முதல் மூவாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதும் திரு சீ அறிவித்த திட்டங்களில் ஒன்று.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்குத்தகைகட்டடம்