சிங்கப்பூரில் ஆகச் சிறப்பாகச் செயல்படும் துறைகளில் ஒன்றாகக் கட்டுமானம்

சிங்கப்பூரில் ஆகச் சிறப்பாகச் செயல்படும் துறைகளில் ஒன்றாகக் கட்டுமானம்

2 mins read
a7c1602e-9ec5-41be-8ab4-3e9854f7678d
சிங்கப்பூரின் கட்டுமானத் திட்டங்களில் ஒன்று. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கட்டுமானத் துறை ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதலாம் காலாண்டில் 11.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

அந்த வகையில், முதலாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியலில் ஆக வலுவான, ஆக வேகமான வளர்ச்சி காணும் துறைகளில் ஒன்றாகக் கட்டுமானத் துறை விளங்குவதாக சிங்கப்பூர் பங்குச் சந்தை வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்தது. இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் அத்துறை மேலும் 6.2 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் பங்குச் சந்தை குறிப்பிட்டது.

சந்தை நிலவரத்தைப் பற்றித் தகவல் வெளியிட்டபோது அது இவ்விவரங்களைத் தெரிவித்தது.

அரசாங்க, தனியார் துறைகள்

அரசாங்க, தனியார் துறைகளில் தொடரும் கட்டுமானப் பணிகள் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவருகின்றன. வீடமைப்பு, வர்த்தகக் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

கட்டுமானத் திட்டங்களுக்கு அதிகரித்துள்ள தேவை கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சென்ற ஆண்டு அத்துறையில் 50.5 பில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவை இருந்தது. இவ்வாண்டு 47 பில்லியலினிருந்து 53 பில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட கட்டுமானத் திட்டங்களுக்கான தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

வருங்காலம்

2027லிருந்து 2030ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 39 பில்லியனிலிருந்து 46 பில்லியன் வெள்ளிக்கு இடைப்பட்ட மதிப்பிலான கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவை இருக்கும் என்று ஆணையம் கணித்துள்ளது.

பொதுவாக மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களைத் தாண்டி மேலும் பல திட்டங்கள் இம்முறை சம்பந்தப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் பங்குச் சந்தை குறிப்பிட்டது. விமான நிலைய, ரயில் உள்கட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், வீடமைப்பு, பொதுப் பயனீட்டு, வர்த்தக, மின்னிலக்க உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் மிகவும் வெளிப்படையாகத் தெரிவதில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், புதிய தெங்கா அரசாங்க மற்றும் சமூக மருத்துவமனை, டெளன்டவுன் ரயில் பாதை 2, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஆகிய கட்டுமானத் திட்டங்கள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கட்டுமானம்பங்குச் சந்தைமுன்னுரைப்பு