ஜோகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் போக்குவரத்துக்கு (ஆர்டிஎஸ்) ரயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் பாதியளவு நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த ரயில் சேவையை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ‘ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ்’ (RTSO) நிறுவனம், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஜோகூர் பாருவில் உள்ள அதன் பராமரிப்பு, பழுதுபார்ப்பு நிலையத்திலும் அதைச் சுற்றிலும் தண்டவாளங்களைப் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அந்தப் பணிகள் ஏறக்குறைய 65 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.
புக்கிட் சகார் ரயில் நிலையத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களிலும் தண்டவாளங்களைப் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள ‘ஆர்டிஎஸ்’ பாதையில் மலேசியப் பகுதியின் முனையமாக அந்த நிலையம் செயல்படும்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தை நோக்கிய பாதையில் தண்டவாளங்களைப் பொருத்தும் பணி ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என்று ‘ஆர்டிஎஸ்ஓ’ புதன்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தது.
ரயில் கட்டமைப்புக்கான மற்ற வேலைகள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும் என்று அது கூறியது.
ரயிலுக்கான மின்விநியோகம், சமிக்ஞை, தொடர்புக் கட்டமைப்புகளைப் பொருத்தும் பணி மார்ச் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு நகரில் உள்ள நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் திட்ட இயக்குநர் ஸஹ்ரின் அப்துல் கனி, ரயில் கட்டமைப்புப் பணிகள் அடுத்து வரும் மாதங்களில் அதிகரித்து 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உச்சத்தை எட்டும் என்று கூறினார். சோதனை, ஒருங்கிணைப்பு போன்றவை அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அஹமது மர்ஸுகி அரிஃபின், “போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுவாக்கும் நம்பகமான ரயில் சேவையை வழங்குவது எங்கள் நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.
‘ஆர்டிஎஸ்’ ரயில் சேவை தொடங்கிய பிறகு, ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்துக்கு 10,000 பயணிகள் வரை அது ஏற்றிச்செல்லும் என்று கூறிய நிறுவனம், உச்ச நேரங்களில் 3.6 நிமிட இடைவெளியில் ரயில்கள் சேவை வழங்க உறுதியளித்துள்ளது.
இந்தப் பாதையில் எட்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
சீனாவில் தயாராகும் அந்த ரயில்களில் முதல் நான்கு தற்போது தயாரிப்பு ஆலையில் சோதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை நிலவரப்படி, மலேசியப் பகுதியில் இந்த ரயில்பாதைக்கான மேம்பாலங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூர் பகுதியில் உள்கட்டமைப்புக்கான 80 விழுக்காட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
சிங்கப்பூர், மலேசிய ஊடகத்தினர், ‘ஆர்டிஎஸ்ஓ’ நிறுவனத்தின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு நிலையத்திற்குப் புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜோகூர் பாரு சென்ட்ரலிலிருந்து வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த நிலையம், 5.7 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.