ஈசூன் கட்டுமானத் தளம் ஒன்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 21) எஃகு கதவு (steel gate) ஒன்று 55 வயது கட்டுமான ஊழியர் ஒருவர்மீது விழுந்ததில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புளோக் 413 ஈசூன் ரிங் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அன்றைய தினம் காலை 6.50 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சீன நாட்டவரான அந்த ஊழியர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். ஆனால், பின்னர் அவர் இறந்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.
இந்த விபத்தில் சூது எதுவும் இருப்பதாகக் காவல்துறை சந்தேகிக்கவில்லை.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர், அந்த ஊழியர் எஃகு கதவு ஒன்றைத் தள்ளியபோது அது கவிழ்ந்து அவர்மீது விழுந்ததாகத் தெரிவித்தார்.
பொதுவாக, பாதுகாப்பு விதிகளுக்கேற்ப, சறுக்கு கதவுகள் முறையாக வடிவமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கும்போது தடம்புரளாமல் தடுக்க பொருத்தமான நிறுத்தங்களுடன் அவை நிறுவப்பட வேண்டும் என அவர் கூறினார்.
இறந்த ஊழியரின் முதலாளி ‘ஜின் ஷான் கன்ஸ்ட்ரக்ஷன்’ என அப்பேச்சாளர் சொன்னார்.
இந்த விபத்து குறித்து மனிதவள அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அந்தக் கட்டுமானத் தளத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.