பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2026 முற்பாதியில் தொடங்கும்

3 mins read
e6c6e64a-f339-47f6-88b7-2e91ba4c9f92
பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையம் 2034ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

புதிய பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் (2026) முற்பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு-தெற்குத் தடத்தில் தற்போதுள்ள சுவா சூ காங், புக்கிட் கோம்பாக் நிலையங்களுக்கு இடையில் அது அமைந்திருக்கும்.

புதிய நிலையம் 2034ஆம் ஆண்டு பயணிகளை வரவேற்கத் தயாராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிலையத்திற்கும் மேம்பாலப் பாதைக்குமான வடிவமைப்பு, கட்டுமானக் குத்தகையை ஒபயா‌ஷி கார்ப்பரே‌ஷனுக்கு வழங்கியிருப்பதாக நிலப் போக்குரவத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்தது. குத்தகையின் மதிப்பு ஏறக்குறைய $281 மில்லியன்.

ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள ஆவணமொன்றின்படி, நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான குத்தகையைப் பெறுவதற்குப் போட்டியிட்ட ஒன்பது நிறுவனங்களில் ஒபயா‌ஷி கார்ப்பரே‌ஷனும் ஒன்று.

ரயில் நிலையங்கள், சுரங்கங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை அந்த நிறுவனம் இதற்கு முன்னர் சிறந்தமுறையில் நிறைவேற்றியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

டர்ஃப் சிட்டி எம்ஆர்டி நிலையம் உட்பட வரவிருக்கும் குறுக்குத் தீவுத் தடத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் உள்ள திட்டங்களில் அந்த நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

நிலப் போக்குரவத்துப் பெருந்திட்டம் 2040இன் ஒரு பகுதியாக பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையத்தைக் கட்டுவது பற்றி 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போதைய மேல்மட்ட ரயில் தடத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் மூன்றாம் நிலையம் அது.

அத்தகைய நிலையம் முதன்முதலில் கிழக்கு-மேற்குத் தடத்தில் அமைக்கப்பட்டது. அந்தத் தடத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட டோவர் நிலையம் 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதைக் கட்டிமுடிக்க மூவாண்டானது. அடுத்து 2019ஆம் ஆண்டு வடக்கு-தெற்குத் தடத்தில் கேன்பரா நிலையம் செயல்படத் தொடங்கியது. அதனைக் கட்டிமுடிக்க நாலாண்டானது.

பிரிக்லேண்ட் நிலையத்தைக் கட்டிமுடிக்கக் கூடுதல் காலம் தேவைப்படும். 1980களில் வடக்கு-தெற்குத் தடம் கட்டப்பட்டபோது அந்த நிலையத்தைக் கட்டும் திட்டமில்லை.

தடத்தின் தற்போதைய தண்டவாளங்களில் மாற்றுப் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளப் புதிய மேம்பாலப் பாதையையும் கட்ட வேண்டியது அவசியமாகிறது.

தற்போதுள்ள ரயில் உள்கட்டமைப்பில் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இப்போதுள்ள மேம்பாலப் பாதையிலிருந்து ரயில் சேவைகளைத் திருப்பிவிடப் புதிய மேம்பாலப் பாதை கைகொடுக்கும். அவ்வாறு செய்வதால் வடக்கு-தெற்குத் தடத்தில் ரயில் சேவைகளை வழக்கம்போல் தொடரமுடியும்.

தற்போதுள்ள தடத்திற்கும் புதிய தடத்திற்கும் இடையில் குறுக்கே செல்லும் புதுத் தண்டவாளங்களும் நிறுவப்படும்.

தடங்களுக்கு அருகில் புதிய துணைத் தண்டவாளமும் அமைக்கப்படும் என்று ஆணையம் சொன்னது. ரயிலில் கோளாறு ஏற்பட்டால் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ரயில் மெதுவாகச் செல்ல முடிவெடுத்தால் துணைத் தண்டவாளத்தில் நின்றுகொள்ளலாம். அவ்வாறு காத்திருப்பது இன்னொரு ரயில் அதனைக் கடந்து வேகமாகச் செல்ல உதவியாக இருக்கும்.

வடக்கு-தெற்குத் தடத்தில் ரயில் சேவை மீட்புக்கும் மீள்திறனுக்கும் அது துணைபுரியும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

தெங்கா நகரில் உள்ள பிரிக்லேண்ட் வட்டாரம், கியட் ஹோங், புக்கிட் பாத்தோக் வெஸ்ட், பெவிலியன் பார்க் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போருக்குப் புதிய நிலையம் வசதியாக இருக்கும்.

ஐடிஇ காலே‌‌ஜ் வெஸ்ட், சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கும் புதிய நிலையம் உதவியாக இருக்கும்.

கட்டுமானப் பணிகளின்போது, அண்மை நிலவரம் குறித்து ஆணையமும் ஒபயா‌ஷி கார்ப்பரே‌ஷனும் அவ்வப்போது குடியிருப்பாளர்களுடனும் சம்பந்தப்பட்ட மற்றத் தரப்பினருடனும் கலந்துபேசும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்