2026ல் பயனீட்டாளர்கள் செலவினம் வலுவாக இருக்கும்: வல்லுநர்கள்

2 mins read
18755dca-379e-4e01-afd0-dfb7efe7387e
சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் மக்கள் வெளிநாடுகளிலும் அதிகமாகச் செலவு செய்தனர். - கோப்புப் படம்: சாவ்பாவ்

வரும் 2026ஆம் ஆண்டில் பயனீட்டாளர் செலவினம் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வேலை வாய்ப்புச் சந்தை மேம்படுவது, முதலீடுகளின் மூலம் தொடர்ந்து பலன்கள் கிடைப்பது ஆகியவை அதற்கான காரணங்கள் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2025ல் பயனீட்டாளர்கள் பெரும்பாலும் பயணங்கள், வீட்டு அத்திவாசியப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றில்தான் ஆக அதிகமாகச் செலவழித்தனர். சிங்கப்பூர் நாணய மதிப்பு வலுவாக இருந்தது, ஊழியர் சந்தை மீள்திறனுடன் இருந்தது ஆகியவை அதற்கு வகைசெய்தன.

2026ல் சில்லறை வர்த்தகச் செலவினம் 3.5 முதல் 4 விழுக்காடு வரை கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதாக மேபேங்க் வங்கியின் மூத்த பொருளியல் வல்லுநர் சுவா ஹாக் பின் தெரிவித்தார். இவ்விகிதம், கடந்த சில மாதங்களில் காணப்பட்டதைவிடக் குறைவு என்றாலும் 2025 முற்பாதியில் பதிவானதைவிடக் கணிசமாக அதிகம் என்று அவர் விவரித்தார்.

கடந்த ஜூலை மாதம் கூடுதல் சிடிசி, எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முற்பாதியில் சராசரியாக 1.2 விழுக்காடு கூடிய சில்லறை விற்பனை ஜூலைக்குப் பிறகு சூடுபிடித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் 24,800 அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய காலாண்டில் பதிவான 10,400ஐவிட இரு மடங்குக்கும் மேலாகும். மனிதவள அமைச்சு வெளியிட்ட, இவ்வாண்டு மூன்றாம் காலாண்டுக்கான ஊழியர் சந்தை அறிக்கையில் இவ்விவரங்கள் தெரிய வந்தன. அந்த அறிக்கை இம்மாதம் வெளியிடப்பட்டது.

இவ்வாண்டு சிங்கப்பூரின் பங்குச் சந்தையும் மேம்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 22.4 விழுக்காடு கூடியது.

இவற்றுக்கு அப்பால் அறைகலன்கள், வீடு தொடர்பான பொருள்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றிலும் இவ்வாண்டு சில்லறை விற்பனை வலுவாக இருந்ததாக சுயேச்சை பொருளியல் வல்லுநர் சோங் செங் வுன் கூறினார்.

மேலும், சிங்கப்பூர் நாணய மதிப்பு வலுவாக இருப்பதால் வெளிநாடுகளில் மக்கள் கூடுதலாகச் செலவழித்தனர் என்றும் திரு சோங் குறிப்பிட்டார். ஜோகூர் பாரு போன்ற இடங்களுக்கு மேற்கொள்ளப்படும் குறுகிய காலப் பயணங்கள், தாய்லாந்து, ஜப்பான், சீனா போன்ற இடங்களுக்கு விமானங்களில் மேற்கொள்ளப்படும் நீண்ட காலப் பயணங்கள் என இருவகைப் பயணங்களை மேற்கொள்வோருக்கும் இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்