பானக் கலன்களைத் திருப்பித் தரும் திட்டம்: $2,500 வரை நிறுவனங்களுக்கு மானியம்

2 mins read
1992dfbf-1b93-4788-9c91-a3773e8c3ac8
பதிவுசெய்துகொண்ட பானத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் $2,500 வரை மானியம் கொடுக்கப்படும். 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிவரை அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரே தவணை மானியமாக $2,500 வரை கிடைக்கவிருக்கிறது. பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் இவ்வாண்டு (2026) ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வருகிறது. அதனால் ஏற்படும் செலவை ஈடுகட்ட மானியம் உதவியாக இருக்கும்.

பானங்களைத் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேசியச் சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அனுப்பிய சுற்றறிக்கையில் மானியம் பற்றிக் குறிப்பிட்டது.

“திட்டம், தயாரிப்பாளர்களிடையே வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் அறிவோம். பொருள்கள் எவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன, அவை சந்தைக்கு எப்படிக் கொண்டுவரப்படுகின்றன, தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் ஒட்டுமொத்த அளவு எவ்வளவு என்பனவற்றைப் பொறுத்து அது அமைந்திருக்கும்,” என்று வாரியம் தெரிவித்தது.

பானங்களைத் தயாரிப்பவர்கள் என்று சொல்லும்போது அவர்கள் அவற்றின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள்.

“தயாரிப்பாளர்களில் சிலர், செலவு அடிப்படையில், திட்டத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைத்துக்கொண்டு அதற்கு மாறும் நிலையில் இருப்பார்கள். அதே நேரம், இறக்குமதியாளர்கள் சிலரும் சிறிய தயாரிப்பாளர்களும் எதிர்நோக்குகின்ற சவால்களையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்,” என்று சுற்றறிக்கை சுட்டியது.

பானக் கலன்களைத் திருப்பித் தரும் திட்டத்தின்கீழ், பயனீட்டாளர்கள், 150 மில்லிலிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை உள்ள பெரும்பாலான பானக் கலன்களுக்குக் கூடுதலாக 10 காசு செலுத்தவேண்டியிருக்கும்.

காலிக் கலன்களைத் திருப்பித் தரும்போது வாடிக்கையாளர்கள், அந்த 10 காசைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இருப்பினும், சில சிறிய நிறுவனங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவு குறித்துக் கவலை தெரிவித்துள்ளன. பொருள்களைப் பதிவுசெய்யவும் கலன்களை அடையாளம் காண உதவும் பார்கோட் எனும் குறியீடுகளை மாற்றவும் அதிகச் செலவாகும் என்று அவை கருதுகின்றன. சிங்கப்பூரில் கலன்களில் விற்கப்படும் பானங்களின் விலை 25 முதல் 60 காசு வரை அதிகரிக்கக்கூடும் என்று சிறிய நிறுவனங்கள் அக்கறை தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்தே வாரியம், புதிய மானியம் குறித்து அறிவித்துள்ளது.

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 400க்கும் மேற்பட்ட பானத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிந்துகொண்டுள்ளன. உள்ளூர் பானச் சந்தையில் அது ஏறக்குறைய 95 விழுக்காடு.

பதிவுசெய்துகொண்ட பானத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் $2,500 வரை மானியம் கொடுக்கப்படும். 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிவரை நிறுவனங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்