தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கையாண்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 6.1% கூடியது: சீ ஹொங் டாட்

2 mins read
05e7bbd8-8727-4c8b-ba5a-bb18ce582b4a
உலகளாவிய நிச்சயமற்ற சூழல், விநியோகத் தொடர் செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் தற்போது சிங்கப்பூரில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை தொடர்ந்து வலுவாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் துறைமுகம், இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட கூடுதலாக 6.1% கொள்கலன்களைக் கையாண்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல், விநியோகத் தொடர் செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் தற்போது சிங்கப்பூரில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை தொடர்ந்து வலுவாக உள்ளதாக அவர் கூறினார்.

பிஎஸ்ஏ பாசிர் பாஞ்சாங் முனையத்துக்கு மே 16ஆம் தேதி வருகையளித்த திரு சீ செய்தியாளர்களிடம் பேசினார். அண்மையில் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதை திரு சீ சுட்டிக்காட்டினார். 

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, 14.18 மில்லியன் டிஇயு (TEU) கொள்கலன்கள் என்ற அளவை எட்டியது.

முன்னணி துறைமுகச் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பிஎஸ்ஏ இவ்வாண்டு பணியமர்த்தவுள்ளது.

“சிங்கப்பூரின் துறைமுக நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதும் மிக முக்கியம்,” என்றார் திரு சீ.

உலகப் பொருளியல் பல மாற்றங்களை எதிர்கொண்டுவரும் வேளையில், சிங்கப்பூர் துறைமுகம் தொடர்ந்து துடிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“சில துறைகளில் எதிர்மறையான தாக்கம் இருக்கும். ஆனால் புதிய வாய்ப்புகளும் உருவாகக்கூடும்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழு, நிச்சயமற்ற வர்த்தக நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் என்றும் பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் நாளடைவில் இதுகுறித்து மேலும் விளக்குவார் என்றும் திரு சீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்