தொடர்ந்து அதிகரிக்கும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள்

தொடர்ந்து அதிகரிக்கும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள்

3 mins read
8ddde858-d211-4bf7-9141-1b965215a22c
சாந்தா சுந்தர். - படம்: காசா ரவுதா பாதுகாக்கப்பட்ட இல்லம்.

திருமண வாழ்வில் எண்ணற்ற சிரமங்களைக் கடந்துவந்துள்ளார் சாந்தா சுந்தர், 47. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஒருவரை மணமுடித்து சிங்கப்பூர் வந்தார்.

புதிய ஊர், புதிய வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாந்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கணவர், செயலிலும் சரி, பேச்சிலும் சரி ஆதரவாக இல்லை.

சாந்தாவுக்கு 20 வயதில் ஒரு மகளும் 12 வயதில் சிறப்புத் தேவையுடைய ஒரு மகனும் உள்ளனர்.

கணவரின் செயலைப் பல காலம் பொறுத்துக்கொண்டு வாழ்ந்த சாந்தாவுக்கு, திருமண வாழ்க்கை 15வது ஆண்டை எட்டியபோது மேலும் ஓர் இடி.

அதுவரை அவர் எதிர்கொண்ட மனரீதியான வன்முறை, உடல்ரீதியாக உருவெடுக்கத் தொடங்கியது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின்றித் தவித்த சாந்தாவுக்கு அவரின் தங்கை மட்டுமே உறுதுணையாக இருந்தார்.

கணவரின் சித்திரவதையைத் தாங்கிக்கொள்ள முடியாத சாந்தாவுக்கு, ‘காசா ரவுதா’ பாதுகாக்கப்பட்ட இல்லம் உதவிக்கரம் நீட்டியது. இல்லத்தில் ஒரு மாதம் இருந்த சாந்தாவுக்கு பல வழிகளிலும் உதவி கிட்டியது.

சென்ற ஆண்டு மணவிலக்கு பெற்ற சாந்தா, தற்போது வாடகை வீட்டில் நிம்மதியாக வாழ்கிறார். தன்னைப்போல் குடும்ப வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளான பெண்களுக்குத் தோள் கொடுத்து இவர் தொண்டில் ஈடுபட்டு வருகிறார்.

தமது கதையை ஓர் எடுத்துக்காட்டாக இதர பெண்களுக்கு எடுத்துச்சொல்லும் சாந்தா தற்போது இளையர் வழிகாட்டியாகவும் பணிபுரிகிறார்.

சாந்தாவைப் போலவே, எனா (உண்மைப் பெயரன்று) தனது முன்னாள் கணவரால் பல சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் கணவரின் குடிப்பழக்கம்.

வதைகளுக்கு ஆளான எனா அவற்றைப் பொறுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றுவந்தார். முன்னாள் கணவன் கோபத்தில் அடித்துத் துன்புறுத்திய காயங்கள் எனாவின் உடலில் வெளிப்படையாகத் தென்படுகின்றன.

இயூ டீயில் அமைந்துள்ள ஃபெய் யுவே குடும்ப சேவை நிலையத்தின் உதவி மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வழிகண்ட எனா இதேபோல் சிரமங்களை எதிர்நோக்கும் பெண்கள் நீண்டநாள் காத்திருக்காமல் உடனடியாகத் தக்க உதவியை நாடுமாறு கேட்டுக்கொண்டார்.

“குடும்ப வன்முறைச் சம்பவங்களை எதிர்கொள்ளும்போது அமைதியாக இருப்பது தீர்வன்று. தனிமையில் தவிக்காமல் யாரிடமாவது பேசி அதிலிருந்து விரைவில் வெளிவர வழி காணவேண்டும்,” என்றார் எனா.

இந்நிலையில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, வீட்டில் கணவன் அல்லது மனைவியைத் துன்புறுத்தும் சம்பவங்கள் எளிதில் புகார் அளிக்கப்படுவதால் அச்சம்பவங்கள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளதாகச் சமூக சேவையாளர்கள் பலர் நம்புகின்றனர்.

சென்றாண்டு 2,008 புதிய குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாயின. இது 2022ல் பதிவாகிய 1,741 சம்பவங்களை விட 15 விழுக்காடு அதிகம். 2021ல் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 1,632. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குடும்ப வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளானோருடன் பணியாற்றும் சமூக சேவையாளர்கள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதற்கான விழிப்புணர்வை அதிகரிக்க மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறுகின்றனர்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சமூக அமைப்புகள் கண்டுள்ள வன்முறைச் சம்பவங்களை மட்டும்தான் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமைப்புகளுக்குத் தெரியாத சம்பவங்கள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். 

இதற்கிடையில் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களும் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு ஆளானதாக அறிக்கை கூறுகிறது. சமூகம், முதியோர் பராமரிப்பு அமைப்புகள், சுகாதார அமைப்புகள் ஆகியவை எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்