ஜோகூரில் சிங்கப்பூர் சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பில் மேலும் மூவர் கைது

1 mins read
4ebf33fc-ce1a-4e3d-a0c4-7f49baeced95
உள்ளூரைச் சேர்ந்த மூன்று இளையர்களைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். - படம்: இணையம்

ஜோகூர் பாரு: ஜோகூரின் ஜாலான் செரம்பாங் பகுதியில் 7 வயதுச் சிறுவனைக் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் எஞ்சிய சந்தேகப் பேர்வழிகள் மூவரையும் காவல்துறை அதிகாரிகள் பிடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூன்று மலேசிய இளையர்களும் டிசம்பர் 20ஆம் தேதியன்று மாலை 5.40 மணியளவில் பொந்தியானில் சிக்கியதாகக் கூறப்பட்டது.

விசாரணை மேற்கொள்வதற்குத் தடுப்புக் காவல் ஆணை கோரி ஜோகூர் பாரு நீதிமன்றத்திற்கு மூவரும் டிசம்பர் 21ஆம் தேதியன்று அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட சிறுவன் சீன நாட்டைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி. சிறுவன் டிசம்பர் 12ஆம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில், 41 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்துவிட்டனர்.

கார்களைப் பழுதுபார்ப்பவரும் சிறுவனுடைய தந்தையின் தொழில் பங்காளியுமான அந்த ஆடவர், சிறுவனைக் கடத்த இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்காக மேலும் மூவருடன் சேர்ந்து சிறுவனைக் கடத்தி, அவன் தந்தையிடமிருந்து 300,000 ரிங்கிட் (S$85,000) பிணைத்தொகை கேட்க அவர் திட்டமிட்டிருந்தார்.

அதே நாளில் காவல்துறையினர் அவரைப் பிடித்துவிட்டதால் பணம் ஏதும் பறிபோகவில்லை.

குறிப்புச் சொற்கள்