தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடைநீக்கத்தை எதிர்நோக்கும் ‘கார்ட்லைஃப்’ பங்குவிலை 17% சரிவு

2 mins read
13ea437e-7ef2-4583-980d-fc62abb334f8
வியாழக்கிழமை பங்குச் சந்தை முடிவில் ‘கார்ட்லைஃப்’ பங்குவிலையானது 17.2% சரிந்து, 3.7 காசானது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியான கார்ட்லைஃப் குழுமம் ஓராண்டு இடைநீக்கத்தை எதிர்நோக்கும் நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 2) அதன் பங்குவிலை 17 விழுக்காடு இறக்கம் கண்டது.

அந்நிறுவனத்தின் உரிமத்தை ஓராண்டிற்கு நிறுத்திவைக்கும் நோக்கத்துடன் இருப்பதாகக் கூறி, சுகாதார அமைச்சு அதற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை பங்குச் சந்தை முடிவில் கார்ட்லைஃப் பங்குவிலையானது 17.2% சரிந்து, 3.7 காசானது.

இம்மாதம் 1ஆம் தேதி புதன்கிழமை கார்ட்லைஃப் தாக்கல் செய்த அறிக்கையில், இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தன்னால் தொடர்ந்து செயல்படுவது சிக்கலாகும் என்று அது எச்சரித்திருந்தது. நடைமுறைச் செலவுகள், திருப்பி அளிக்க வேண்டியிருக்கும் தொகை, வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதில் உறுதியில்லா நிலை, அபராதம், சட்டவழிக் கோரிக்கைகள் போன்றவற்றை அது சுட்டிக்காட்டி இருந்தது.

அதே நேரத்தில், சுகாதார அமைச்சின் ஆலோசனையையும் அது கோரியிருந்தது.

அந்நிறுவனத்தின் தர மேலாண்மை, இடர் மதிப்பீடு உள்ளிட்ட முக்கியச் செயல்பாடுகளில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருந்ததைச் சுகாதார அமைச்சு அண்மையில் கண்டறிந்தது.

தனது மருத்துவ ஆளுகை அதிகாரியை மாற்றுமாறும் அந்நிறுவனத்திற்கு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து கார்ட்லைஃப் சேகரித்த 160 தொப்புள்கொடி ரத்த அலகுகளையும் மறுஆய்வு செய்யுமாறும் அமைச்சு உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சின் கடிதத்திற்கு 14 நாள்களுக்குள் கார்ட்லைஃப் பதிலளிக்க வேண்டும்.

அந்த ரத்த வங்கியின் சில ரத்தச் சேமிப்புக் கலன்களில் வெப்பநிலை உகந்த அளவில் இல்லாததால் தொப்புள்கொடி ரத்தம் பெரிதும் பாழானதாக 2023ஆம் ஆண்டு இறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, 2023 நவம்பர் முதல் ஆறு மாதங்களுக்கு அது இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் 2024 செப்டம்பர் 15 முதல் மீண்டும் அது தனது செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்