தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்த வங்கி, மனிதத் திசு சேவைகளுக்கான கார்ட்லைஃபின் உரிமங்கள் நீட்டிப்பு

2 mins read
a295504d-8fd4-45be-a481-bf497969e2ff
கார்ட்லைஃப் குழுமம். - கோப்புப் படம்: ‌ஷின் மின்

தங்களின் ரத்த வங்கி, மனிதத் திசு (human tissue) வங்கிச் சேவைகளுக்கான உரிமங்களை சுகாதார அமைச்சு ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதாக கார்ட்லைஃப் குழுமம் தெரிவித்துள்ளது.

அந்த நீட்டிப்பு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடப்புக்கு வந்ததாகவும் கார்ட்லைஃப் குறிப்பிட்டது.

“சிங்கப்பூரில் எங்கள் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாகத் தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய எங்கள் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது,” என்று கார்ட்லைஃப் கூறியது.

அதனால், வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரைக்குமான ஓராண்டு காலத்தில் நிதியைப் பொறுத்தவரை தங்களின் நிலைப்பாட்டைக் கணிக்க முடியவில்லை என்று அது செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

ரத்த வங்கிச் சேவைகளைக் குறிப்பிட்ட அளவில் மீண்டும் தொடங்க முன்னதாக கார்ட்லைஃபுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் 30 யூனிட் அளவு வரை தொப்புள் கொடி மூலம் கைக்குழந்தைகளிடமிருந்து பெறப்படும் ரத்தத்தை கார்ட்லைஃப் சேமிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 13) வரைக்குமான காலகட்டத்துக்கு அந்த விதிமுறை பொருந்தும்.

கார்ட்லைஃப் அதன் ரத்த வங்கிச் சேவைகளை மீண்டும் தொடங்க சுகாதார அமைச்சு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றை அக்குழுமம் பூர்த்திசெய்ததை அமைச்சு உறுதிப்படுத்திய பிறகு குறிப்பிட்ட அளவில் ரத்த வங்கிச் சேவைகளை மீண்டும் தொடங்க கார்ட்லைஃபுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சேமிப்பு வசதி தொடர்பில் விதிமுறைகளை மீறியதன் காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார்ட்லைஃப் அதன் செயல்பாடுகளைத் தொடர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அதன் 22 ரத்த சேமிப்புக் கலன்களில் ஏழில் இருந்த ரத்தம் சரியான வெப்பநிலையில் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்