சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் அதிகரித்து, ஆண்டு அடிப்படையில் 2.7 விழுக்காடாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களின் செலவினத்தை மேம்பட்ட முறையில் வெளிப்படுத்தும் வகையில், தனியார் போக்குவரத்து, தங்குமிடக் கட்டணங்கள் ஆகியவை மூலாதாரப் பணவீக்க மதிப்பீட்டின்போது கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.
ஒப்புநோக்க, கடந்த ஜூலை மாதம் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி அந்த விகிதம் 2.5 விழுக்காடாகக் குறைந்தது. ஈராண்டுகளில் பதிவான ஆகக் குறைந்த விகிதம் அது.
ஆகஸ்ட் மாதம், சேவைத் துறையில் பணவீக்க விகிதம் ஆக அதிகமாக உயர்ந்து 3.3 விழுக்காடாகப் பதிவானது. ஜூலையில் அது 2.9 விழுக்காடாக இருந்தது.
விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் சிறிது குறைந்ததைத் தொடர்ந்து விடுமுறைச் செலவினம் வலுவாக அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
தனியார் போக்குவரத்துக் கட்டணங்கள் சரிந்ததால், ஆகஸ்ட் மாத ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 2.2 விழுக்காடாகக் குறைந்தது. ஒப்புநோக்க, ஜூலை மாதம் அது 2.4 விழுக்காடாக இருந்தது.
சேவைத் துறைப் பணவீக்க விகிதம் மிதமான நிலையில் தொடரும் என்றும் இந்த ஆண்டில் (2024) இனிவரும் மாதங்களில் அது மேலும் தணியக்கூடும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான பணவீக்க முன்னுரைப்பில் மாற்றம் இல்லை என்று ஆணையமும் அமைச்சும் கூறின. இந்த ஆண்டு முழுவதற்குமான மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 2.5% முதல் 3.5%ஆகப் பதிவாகும் என்றும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 2 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சில்லறை விற்பனை, இதர பொருள்களின் விலை ஆகிய பிரிவுகளில் ஆகஸ்ட் மாதப் பணவீக்கம் 0.4 விழுக்காடு வரை அதிகரித்தது.
உணவுப் பிரிவில் மாற்றம் ஏதுமில்லை. மின்சாரம், எரிவாயுப் பிரிவுகளிலும் பணவீக்க விகிதத்தில் மாற்றமில்லை.
தங்குமிடக் கட்டணப் பிரிவில் வீட்டு வாடகை உயர்வு மெதுவடைந்ததால் பணவீக்கம் சற்றே குறைந்து 2.9 விழுக்காடானது.
தனியார் போக்குவரத்துக் கட்டணம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விழுக்காடு குறைந்தது. ஜூலை மாதம் அது 0.9 விழுக்காடு அதிகரித்தது.

