தெலுக் பிளாங்கா மேம்பாலத்திற்கு அடியில் சடலம்

1 mins read
6af744a8-e3aa-400c-a20d-50fd021bac7f
தெலுக் பிளாங்கா ரோட்டில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் 36வயது ஆடவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

தெலுக் பிளாங்கா ரோட்டில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் 36வயது ஆடவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலை ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து காலை 9.05 மணிவாக்கில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. ஆடவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்பப்படுகிறது.

சாலையின் வலப்பக்கத் தடத்தில் சடலம் இருந்தது என்றும் நீல நிறச் சிறு கூடாரம் கொண்டு அது மறைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது.

நண்பகல் 12 மணி வரை மேம்பாலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் சாலையில் உள்ள மூன்று தடங்கள் மூடப்பட்டன.

இடப்பக்கம் இருந்த ஒரு தடம் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

மாண்டவர் பார்க்க ஐரோப்பாவைச் சேர்ந்த ஆடவர் போல் இருந்ததாக சடலத்தை கண்ட சிலர் கூறினர். மேலும் அவரின் பை ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்