கள்ளப்பண மோசடி: சிங்கப்பூர் நிரந்தரவாசியிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை

2 mins read
4b0d8924-40e3-416a-96b0-fb04245e78b5
இந்தோனீசியக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட சிங்கப்பூர் நிரந்தவாசி யான் ஜென்சிங். - படம்: இபிஏ

கள்ளப்பண மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர் எனச் சீனக் காவல்துறையினரால் தேடப்படும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான யான் ஜென்சிங்யிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சிங்கப்பூர் காவல்துறை வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) தெரிவித்தது.

சீன நாட்டவரான யான், தனது குடும்பத்தினருடன் விடுமுறைக் காலத்தைச் செலவிடுவதற்காக பாத்தாம் தீவுக்கு வந்தார்.

அங்கு இந்தோனீசிய அதிகாரிகளால் டிசம்பர் 2ஆம் தேதி அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

“சிங்கப்பூர் சட்டங்களின்படி யான் பணமோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை நிரூபிக்க எங்களிடம் போதுமான ஆதாரம் இல்லை. இதனால், இந்த மோசடி குறித்து எங்களால் அவரிடம் அதிகாரத்துவ விசாரணையை மேற்கொள்ள முடியாது,” எனச் சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

“சிங்கப்பூர் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியா யான்?,” என்ற ‘சிஎன்ஏ’ கேள்விக்குப் பதிலளித்தபோது காவல்துறை மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தது.

சீனாவில் செயல்படும் இணையச் சூதாட்டக் கும்பலுக்கு கிட்டத்தட்ட 18 மில்லியன் அமெரிக்க வெள்ளியைக் கள்ளப்பணத்திலிருந்து நல்லப்பணமாக மாற்ற யான் உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

அனைத்துலகக் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக யான் அறிவிக்கப்பட்டதையடுத்து அவரை இந்தோனீசியாவில் தடுத்துவைத்ததாக அந்நாட்டுக் காவல்துறை கூறியது.

யானுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் நிரந்தரக் குடியுரிமை வழங்கும்போது அவர்மீது அனைத்துலக அளவில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை எனச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

இவ்வழக்கில் உதவிவேண்டி சீன அதிகாரிகளிடமிருந்து எந்த அழைப்பும் தங்களுக்கு வரவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

“யான் கள்ளப்பண மோசடியில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்தால், சிங்கப்பூர் சட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் அவரிடம் விசாரணை நடத்துவோம்,” என அது மேலும் சொன்னது.

குறிப்புச் சொற்கள்