உள்ளூர் தோல்பராமரிப்பு நிறுவனமான ‘சூ பாம்’ அதன் ‘ரேப்பிட் இட்ச் ரிலீஃப் செராமைட் மாய்ஸ்சுரைசர்’ (Rapid Itch Relief Ceramide Moisturiser) பொருளின் போலிப் பதிப்புகள் இணையத்தில் விற்கப்படுவதைக் கண்டுபிடித்ததை அடுத்து, வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து தெரியாமல் பொருள்களை வாங்கி, அவற்றைப் பயன்படுத்திய பிறகு தோலில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.
ஜனவரி மாத இறுதியிலிருந்து வாடிக்கையாளர்களிடமிருந்து ‘சூ பாம்’ 30க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாகப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
வாடிக்கையாளர் ஒருவர் ‘ஷோப்பி’ இணையத் தளத்தில் உள்ள தனது அதிகாரபூர்வக் கடையைத் தொடர்புகொண்டபோது ‘சூ பாமிற்கு’ அது பற்றித் தெரியவந்ததாகப் பேச்சாளர் சொன்னார்.
மற்றொரு விற்பனையாளரிடமிருந்து தாம் வாங்கிய பொருள் அசல் பொருளின் தோற்றத்திலிருந்து வேறுபட்டதாக அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார்.
மற்றொரு வாடிக்கையாளர், தாம் இணையத்தில் ‘சூ பாம்’ பொருளை வாங்கிப் பயன்படுத்திய பிறகு தோலில் அரிப்பும் தடிப்புகளும் ஏற்பட்டதாக ‘சூ பாம்’ நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பொருள், ‘சூ பாம்’ நிறுவனத்தின் முதலாவது மற்றும் அதிக அளவில் விற்பனையாகும் சரும ஈர்ப்பதம் (மாய்ஸ்சுரைசர்) ஆகும்.
போலியான பொருள்கள் விற்கப்படுவதைக் கண்டுபிடித்த பிறகு, அதன் அதிகாரத்துவ இணையத் தளங்களில் போலிப் பொருள்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ‘சூ பாம்’ ஆலோசனைகளை வெளியிட்டது.

