உலகிற்கு இணைப்புப் பாலங்களாகச் செயல்படும் நாடுகள் தேவை: அதிபர் தர்மன்

உலகிற்கு இணைப்புப் பாலங்களாகச் செயல்படும் நாடுகள் தேவை: அதிபர் தர்மன்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 8:30 pm

2 mins read

பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையான புதிய உலக ஒழுங்கை அடைவதற்குத் தனிப்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் இணைப்புப் பாலங்களாகச் செயல்படும் நாடுகள் உலகிற்குத் தேவை என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சுவீடனுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன் ஸ்டாக்ஹோம் பொருளியல் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) உரையாற்றினார்.

அவர், அமெரிக்காவின் தலைமையில் அமைந்த ஒற்றை முனை உலக அணுகுமுறை மாறிவரும் நிலையில், உலகம் இயல்பாகவே கூட்டுறவுமிக்க பல முனை உலக ஒழுங்கை நோக்கிச் செல்லும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மோசடைந்து வரும் விரிசல்கள், மோதல்கள், வர்த்தகம் போன்றவை உலகைப் பிளவுபட்ட அமைப்புகளாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் என்று அதிபர் தர்மன் எச்சரித்தார்.

எனவே, புதிய காலகட்டத்திற்கான விதிகளை உருவாக்கவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கவும் நாடுகளை ஒன்றிணைத்துக் கூட்டணிகளை உருவாக்கும் திறன்மிக்க நாடுகள் மிகவும் அவசியமாகின்றன.

இத்தகைய இணைப்புப் பாலங்களாக விளங்கும் நாடுகள் சிறியதாகவோ, நடுத்தரமானதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் என்று அதிபர் தர்மன் சுட்டினார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புவியின் நலனைப் பாதுகாக்கக் கூட்டணிகளை உருவாக்கி வரும் சுவீடனையும் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஐநா சபையில் சிறிய நாடுகளின் குரல் ஒலிக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சிங்கப்பூரையும் அவர் இதற்குச் சான்றாகக் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் அது தொடர்பான அரசியல், சமூகக் கருத்துகளை மக்கள் இப்போதே உணரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் மனிதர்களின் உடல்நலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் உணரும்போது, அதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக ஆதரவளிப்பது நம்பகமான கருத்தாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

மாசுபாடு, வெப்ப அழுத்தத்தின் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்வதாகவும் ஏழை எளிய மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.

தென்கிழக்காசிய நாடுகளைப் பாதிக்கும் புகைமூட்டப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்தோனீசியா எடுத்த நடவடிக்கைகள் குறுகிய கால, நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளுக்கு ஒரு நல்ல உதாரணம் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனா ஆகிய இரு பெரும் சக்திகளும் ஒருங்கிணைந்த அங்கமாக இல்லாமல் உலகளாவிய ஒத்துழைப்புக்கான எந்தவொரு அமைப்பும் சாத்தியமில்லை என்பதைத் தமது உரையில் அதிபர் தர்மன் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

உலகளவில் மிகப் பெரிய சந்தைகளையும் புத்தாக்கத்தின் முதன்மை ஆதாரங்களையும் கொண்டுள்ள இவ்விரு நாடுகளும், கரிம வெளியேற்றத்தின் அளவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பெரும்பங்கைக் கொண்டிருப்பதால் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க இன்றியமையாதவை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்