தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களை ‘ஏஐ’க்குத் தயார்ப்படுத்த நாடுகள் அதிக முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் வோங்

2 mins read
f3bd2498-0e83-46bc-b7ec-190bd9c9b619
ஏபெக் உச்சநிலை மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

சோல்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டே வருகிறது. அதனால் உலக நாடுகள் அதன் ஊழியர் அணியை ‘ஏஐ’க்கு ஏற்றவாறு தயார்ப்படுத்த அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வேலைச் சந்தைக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களது திறன்களை மாற்றிக்கொள்வார்கள் என்று அரசாங்கங்கள் நினைக்கக் கூடாது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

“ஏபெக் கூட்டணியில் உள்ள நாடுகள் தங்களது ஊழியர் அணிக்குத் தேவையான திறன் மேம்பாடு, திறன் பயிற்சி, வேலை உருமாற்றம், ஏஐ மீதான நம்பிக்கை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம் சவால்கள் மிகுந்த சூழலிலும் முன்னேற முடியும்,” என்று அவர் கூறினார்.

தென்கொரியாவில் ஏபெக் உச்சநிலை மாநாட்டின் இறுதி நாளான சனிக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற கூட்டத்தில் திரு வோங் பேசினார். அப்போது இக்கருத்துகளை அவர் தெரிவித்தார்.

“ஏஐ தொழில்நுட்பத்திற்குத் தயாராகச் செய்யப்படும் முதலீடுகள் நிறுவனங்களுக்கு மட்டும் பலன் தராமல் ஊழியர்களுக்கும் நாட்டுக்கும் பலன் தரும்,” என்று பிரதமர் சொன்னார்.

சிங்கப்பூரின் கவனம் ஏஐ தொழில்நுட்பத்தின்மீதும் அதை எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம் என்பதுமீதும் உள்ளதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் மின்னிலக்க முறையில் இணைக்கப்பட்ட சிறிய நாடு. அது தனியாகச் சிறந்த ஏஐ தளக் கட்டமைப்புகளை உருவாக்க முடியாது. ஆனால், சிங்கப்பூர் ஏஐ தொழில்நுட்பத்தை நிதி, தளவாடம், சுகாதாரம், உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உதவும்,” என்றார் பிரதமர் வோங்.

“இதைச் சிங்கப்பூரால் மட்டும் தனியாகச் செய்யமுடியாது, ஏபெக் நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து சிறந்த வழிமுறைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

நாடுகளின் அடுத்த கட்ட வளர்ச்சி ஏஐ சார்ந்து உள்ளது என்று கூறிய பிரதமர் வோங், “இது உற்பத்தித்திறனை உயர்த்தும், நமது வாழ்க்கைமுறையையும் வேலைச் சூழலையும் மாற்றும்,” என்றார்.

“புதுப்புது தொழில்நுட்பங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. சில வேலைகள் மறையக்கூடும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இது வரலாற்றில் நடந்துவருவதுதான், அதனால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அவர் கூறினார்.

“அதேபோல் அதிக நம்பிக்கையுடன் இருந்து ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை நாடுகள் செயல்படுத்த வேண்டும்,” என்று ஏபெக் உறுப்பினர்களைப் பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

ஏபெக் உச்சநிலை மாநாட்டை முடித்தபிறகு பிரதமர் வோங், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை சோலில் அதிகாரபூர்வமாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்