இளம் மகனை சட்டவிரோத போதைப் பொருளை உட்கொள்ள அனுமதித்ததாக நம்பப்படும் தம்பதி

2 mins read
2728ede8-4a3a-4759-b616-9b4bea8a6b22
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் தம்பதி, சட்டவிரோத போதைப்பொருள் ஒன்றை உட்கொள்ள 15 வயதுப் பிள்ளையை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபரான ஆடவருக்கு வயது 45, அவரின் மனைவிக்கு வயது 51. சம்பந்தப்பட்ட பதின்ம வயதுச் சிறுவன் மனைவிக்குப் பிறந்தவர், கணவருக்கு ஒன்றுவிட்ட மகன்.

மெத்தம்ஃபெட்டமின் உட்கொண்டது, போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பொருள்களை வைத்திருந்தது, போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்த இளையருக்கு அனுமதி தந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தம்பதி மீது சுமத்தப்பட்டன. இளையரின் அடையாளத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அனைவரின் பெயர்களையும் வெளியிட அனுமதி இல்லை.

அத்தம்பதி, போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்பு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. கணவர், 2000ஆம் ஆண்டு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவரின் மனைவி 2020ல் அனுப்பப்பட்டார்.

அதற்குப் பிறகும் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாததாகக் கூறப்படுகிறது. இப்போது இருவரும் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு மெத்தம்ஃபிட்டமினை உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஜூன் 23ம் தேதி ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் இருவரிடமும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி, ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதின் மகனைப் பெயர் தெரிவிக்கப்படாத போதைப்பொருளைப் புகைக்க தம்பதியர் அனுமதித்ததாகவும் நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சிறுவன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை. தம்பதியரின் வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்