தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சம்பளம் கேட்டு பதாகை ஏந்துமாறு ஊழியர்களை ஊக்குவித்த தம்பதிக்கு அபராதம்

2 mins read
5b993606-3442-464e-a322-5926e3bff26c
ரபெக்கா ரூபினி ரவீந்திரன் (இடது), வீ டெரிக் மகேந்திரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுமானத் தளங்களில் பதாகை ஏந்தி சம்பளம் கேட்டுக் குரல் கொடுக்குமாறு 15 வெளிநாட்டு ஊழியர்களை ஊக்குவித்த தம்பதியருக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்தது.

நிறுவனம் ஒன்று அவர்களுக்கு வழங்கவேண்டியிருந்த எஞ்சிய சம்பளத் தொகையை, இரண்டு கட்டுமானத் தளங்களில் பதாகை ஏந்திக் கேட்குமாறு தம்பதி ஊக்குவித்திருந்தனர்.

ரபெக்கா ரூபினி ரவீந்திரன், 33, உரிமமின்றி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது, வெளிநாட்டு ஊழியர்களை வேலை அனுமதி அட்டை விதிமுறை ஒன்றை மீற ஊக்குவித்தது ஆகியவற்றின் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும், கணவர் வீ டெரிக் மகேந்திரனுடன் சேர்ந்து ஜாலான் சத்துவில் உள்ள டக்கோட்டா பிரீஸ், தெங்கா கார்டன் வோக் ஆகிய கட்டுமானத் தளங்களில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி இரண்டு பொதுக் கூட்டங்களுக்கு ரபெக்கா ஏற்பாடு செய்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.

ரபெக்கா, 36 வயது வீ இருவரும் அந்தக் காலகட்டத்தில் டக்கோட்டா பிரீஸ், தெங்கா கார்டன் வோக் திட்டங்களை நடத்திய முக்கிய நிறுவனமான ‘ரிச்’ கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். ‘ரிச்’ மற்றும் அதனுடன் இணைந்துப் பணியாற்றிய ‘டிஎல்டி’ கட்டுமான நிறுவனம் ஆகிய இரண்டிடமிருந்தும் எஞ்சிய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வெளிநாட்டு ஊழியர்களை ஊக்குவிப்பது தம்பதி செயலின் நோக்கமாகும்.

தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு ரபெக்காவுக்கு 8,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. தான் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அதன் காரணமாக அபராதத் தொகையைக் குறைக்குமாறும் ரபெக்கா, மாவட்ட நீதிபதி வின்ஸ் குய்யிடம் கேட்டுக்கொண்டார்.

அபராதத் தொகையை ரபெக்கா தவணை முறையில் செலுத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

ரபெக்காவைத் தூண்டிவிட்டது, வேலை அனுமதி அட்டையில் உள்ள விதிமுறையை மீற வெளிநாட்டு ஊழியர்களை ஊக்குவித்தது ஆகியவற்றின் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை வீ ஒப்புக்கொண்டார். அவருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வீ அபராதத்தை முழுமையாகச் செலுத்திவிட்டார்.

குறிப்புச் சொற்கள்