சிங்கப்பூர் வீட்டில் சட்டவிரோதமாக, ரேக்டால் (ragdoll) வகை பூனைகளை இறக்குமதி செய்து அவற்றை இனப்பெருக்கத்தில் ஈடுபட வைத்த திருமணமான தம்பதிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதி, ஓர் ஆண் பூனையையும் நான்கு பெண் பூனைகளையும் இறக்குமதி செய்தனர். 2022ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 30 பூனைக் குட்டிகள் பிறந்தன.
இந்நடவடிக்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று தெரிந்தே தம்பதியர் அவ்வாறு செய்திருக்கின்றனர். எட்டு பூனைக் குட்டிகளை அவர்கள் மொத்தம் 46,300 வெள்ளிக்கு விற்றனர்.
குற்றவாளிகளான வென் டியென்ஹாவ், சியூ ஷிவென் தம்பதியருக்கு வியாழக்கிழமை (நவம்பர் 20) தலா 52,500 வெள்ளி அபராதமும் ஒரு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இருவருக்கும் வயது 29.
தம்பதியர் இருவரும், தகுந்த உரிமமின்றி விலங்குகளைப் பெருக்குவதற்கான வர்த்தகப் பண்ணையை நடத்தியதாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். பூனைகளை விற்பதற்காக உரிமமின்றி அவற்றைத் தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டதாகச் சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சிங்கப்பூரில் விற்கப்படும் ரேக்டால் பூனைகளின் தரத்தில் குறைபாடு இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாக இருவரும் கூறினர்.

