பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதிக்குச் சிறைத் தண்டனை

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதிக்குச் சிறைத் தண்டனை

2 mins read
e430418e-b67f-4c11-994c-e7a12fa98345
படம்: - தமிழ் முரசு

பலமுறை அறைந்து, உதைத்து, துன்புறுத்தப்பட்ட ஒரு பணிப்பெண், முதலாளியின் மகளை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் சென்றபோது, வேறொரு பணிப்பெண் அவரது முகத்திலிருந்த காயங்களைப் பார்த்து என்ன நடந்ததென்று கேட்டார்.

அத்துடன், அவரது காயங்களைப் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உதவி கேட்டார். அதைப் பார்த்த இன்னொரு பணிப்பெண், காவல்துறையில் புகார் செய்தார்.

இந்தக் குற்றத்திற்காக 47 வயது சிங்கப்பூரர் வாங் செங் சியாங்குக்கு திங்கட்கிழமை 13 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், $1,000 இழப்பீடு தருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரது மனைவியான, சீனாவைச் சேர்ந்த 36 வயது ஜின் யானுக்கு 28 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் $2,500 இழப்பீடு தரவேண்டும்.

இருவரும் ‘குற்றமற்றவர்கள்’ எனச் சொல்வதாகவும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தோனீசியரான 31 வயது லுட்டின், 2017 ஜூன் மாதம் இந்தத் தம்பதியின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யத் தொடங்கினார். மறு மாதத்திலிருந்து ஆறு மாதகாலம் அவர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி லுட்டின் தவறு செய்ததாகத் தனக்குத் தோன்றிய போதெல்லாம் ஜின் யான் அவரை அடித்தார்.

2017 ஜூலையில் நடந்த ஒரு சம்பவத்தில், சில பாத்திரங்களை ஈரமில்லாமல் துடைக்க மறந்ததற்காகப் பணிப்பெண்ணை அறைந்தார் ஜின் யான்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம், வீட்டில் யாருமில்லாதபோது திருவாட்டி லுட்டின் சாதம் சமைத்தார். ஜின் யானும் பிள்ளைகளும் வீடு திரும்பிய பிறகு, அவரது மகன் சூடான சட்டியைத் தொட்டு விரலைக் காயப்படுத்திக் கொண்டான்.

இதற்காகத் திருவாட்டி லுட்டினின் கன்னத்தில் இருமுறை அறைந்து, கூந்தலைப் பிடித்து இழுத்து, கீழே விழச் செய்தார் ஜின் யான். பிறகு பணிப்பெண்ணின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

வாங் வீடு திரும்பி நடந்ததைக் கேள்விப்பட்டவுடன், அவரும் திருவாட்டி லுட்டினின் முகத்தில் அறைந்தார்.

2018 ஜனவரி மாதம் வேறு இரு பணிப்பெண்களின் உதவி கிடைக்கும்வரை, திருவாட்டி லுட்டின் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளானார்.

குறிப்புச் சொற்கள்